fredag 26. desember 2014






ஆண்டாண்டு காலமாக ஆரவணைத்த அன்னையம்மா                                       
அன்னை என்று நாமிருந்தோம்-
கடல் அன்னை என்று நாமிருந்தோம்          
தாயவளே சேயவற்ரை அழித்து விட்ட மாயமென்ன

விடுமுறை தின மென்று ஆனந்தமாய் உறங்கையிலே         
ஆங்காங்கே முற்றமதில் சிறுவரவர் விளையாடையிலே         
கண்ணிமைக்கும் நேரமதில் நடந்த தென்ன ஐயையோ

மேலெழுந்து வீறு கொண்டு பாய்ந்தாயே எம் மீது
நீ போனவுடன் கண்டதுவே முலிவான பிணங்களம்மா            
காலின்றி கையின்றி தலையின்றி உடலின்றி                              
எத்தனை உயிர்களம்மா- நீ எம்மை விட்டு எடுத்ததுவோ

ஆயிரமாம் பல் ஆயிரமாம் நிலங்களெங்கும் உடல்களம்மா
அடையாளம் காண்பதற்கேஆட்களுக்கே தெரியவில்லை
எதிர்காலச்சந்ததியை கருவோடு அழித்தாயே 
ஏனிந்த சாபமம்மா ஏதுமற்ற எங்களுக்கு


 நீலக் கடலம்மா நினைக்கையிலே பதறுதம்மா
 எத்தனை குடும்பமம்மா. தாயின்றி தந்தையின்றி
 கணவனின்றி மனைவியின்றி பிள்ளையின்றி தவிக்குதம்மா-
 நீ செய்த கொடுனையினால்

 இயற்கை தந்த அன்னையம்மா-நாம் இன்னல் பட்ட இனமம்மா
 இன்னலென்ன எம் வாழ்வில நிலையான சாபம் தானா?
 சேய்யாதே மீண்டுமிந்த கோரப்பசித் தாண்டவத்தை
 கொஞ்ச முள்ள எம் இனத்தை காவு கொள்ளப் பார்க்காதே
                        கவிஞர் நாவாய+ரான்
                  வென்சலாஸ் அனுரா கனடா

torsdag 23. oktober 2014

கடல்யோசித்தது..

கடல்யோசித்தது..
(சிறுகதை)

-                                                         செ.டானியல்ஜீவா-

“எனக்கொரு நண்பன் உண்டு, அவன் தனக்கேன வாழாத் தலைவன்”என்ற கிறிஸ்தவப் பாடல் சின்ன வயதிலிருந்து என் காதுகளில் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது.இந்தப் பாடலின் வரியை என் நண்பன் குமாரைக் காணும் போது அவ்வப்போது பாடுவேன். அவன் நான் பாடும் போதெல்லாம் கேலியும் கிண்டலும் செய்வதோடு என்னைப் பார்த்து ‘பன்னாடை பன்னாடை’ என்று திட்டித் தீர்ப்பான்.
 குமாருக்கு  நாற்பத்திரண்டு வயதிருக்கும்.பொது நிறமும்,  உடல் நல்ல கட்டுமானமாகவும், உயரமாகவும் இருப்பான். ரொம்பக் கறாரானவன் போல் தன்னைக் காட்டிக் கொள்வான்.நெஞ்சில் அடர்ந்து கிடக்கும் கறுத்த முடியெல்லாம் வெளியில் தெரியும் படியாக சேர்ட்டின் மேற்ப் பக்கப் பட்டனைத் திறந்து விட்டபடியே என்னோடு எப்போதும் வருவான்.எதிரில் வரும்  பெண்கள் எல்லாம் தனக்காக அலைகிறார்கள் என்று தனக்குள் நினைப்பான்.நினைப்பதோடு மட்டும் நின்று விடமால்  நண்பர்களுக்கெல்லாம் அவன் சொல்லித் திரிவான்.சிலவேளை நெஞ்சை நிமித்தியபடி ஏதோ உலகத்தைப் தலை கீழாக பிரட்டப் போகிறவன் போல் அலைவான். ஆனால் ஒண்டும் உருப்படியாகச் செய்யமாட்டான்.
எனக்கு குமார் நண்பனாகியது, கல்லுரியிற் படித்த கால கட்டதில்தான்.படித்த காலத்தில் தொடங்கிய நட்பு இன்று வரை தொடர்வது பெரிய சாதனையாகவே நான் நினைக்கிறேன். எப்ப என்ன செய்வான் என்று எனக்கு மட்டு மல்ல யாருக்குமே தெரியாது.
சிறுவயதில் பரவைக் கடலில் கட்டப்பட்டுக் கிடந்த வள்ளத்தில் ஏறி விழுந்து போனதால் என்னுடைய ஒற்றைக் காலில் உடைவு ஏற்பட்டு விட்டது.இடது காலை கொஞ்சம்  ‘தென்டித்தென்டித்’தான் நான் நடப்பேன். என்னைச் ‘சொத்தி’ என்று சிலர் கூப்பிடுவார்கள்.இருந்தும் குமார் என்னைச் சொத்திக் காலன் என்று கூப்பிடுவதில் தனிக்  கவனம் எடுப்பான். நான் நல்ல கறுப்பாக இருப்பேன். செயின்ச் சுமோக்கர். பகலில் வேலைக்குப் போகிறதைத் தவிர இரவு முழுதையும் போதையில் கழிப்பேன். நான்கறுப்பாய் பிறந்தேன் என்பதில் ஒரு வகையான தாழ்வு மனப்பான்மை எனக்குள் இருந்து கொண்டேயிருக்கிறது. சினிமாப் பாடலில் மட்டும் ‘கறுப்பு’என்பது அழகென்று சொல்லப்பட்டிருக்கலாம். ஆனால் அதை அனுபவித்து பார்த்தால் தான் அதன் வலி தெரியும். தலை முடி நன்றாகக் கறுப்பாக இருக்கும். கட்டையாகவும் கறுப்பாகவும் இருந்து தென்டித் தென்டித்  நடப்பதால் அன்றாட வாழ்கையில் மிகுந்த அயர்ச்சியையும் சோர்வையும் உணர்வதுண்டு.
ஒருவருடன் கொஞ்ச நாட்கள் பழகினாலே நான் அவர்களை அடையாளம் கண்டு விடுவேன். பின் அவர்கள் என்னை ஏற்றுக் கொள்கிறார்களா? அல்லது புறந் தள்ளுகிறார்களா என்பதை நான் எனக்குள் உணர்ந்து கொள்வேன்.அப்படித் தான் குமாரை நான் அடையாளம் கண்டு  கொண்டேன். ஆனால் அவன் என்னை அலட்சியப்படுத்துவதும் பின் தானாகவே என்னோடு  ஒட்டிக் கொள்வதுமாகவே இருந்து வந்தான்.
நான் அவனை முதலில் சந்தித்த போது இலங்கை அரசியல் பற்றியே அவன் கதைத்தது இன்னும் எனக்கு நினைவில் இருக்கின்றது. நான் எப்போதுமே தீவிரமாக அரசியலில் ஈடுபட்டது கிடையாது. அவ்வப்போது அரசியலைக் கூர்ந்து கவனித்து வருவேன் அவ்வளவுதான்.அதற்கு மேல் ஒரு படிகூட மேலே போகமாட்டேன்.ஆனால் அவன் இலங்கை அரசியலை முழுமையாக அறிந்தவன் போல அலட்டிக் கொள்வான். நான் அவனுடைய அலட்டலை அதிகம் காது கொடுத்துக் கேட்பதில்லை.
அவனுடைய அப்பா கடன் தொல்லை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டார்.அப்பா இறந்து ஆறுமாதம் கூட ஆகாத நிலையில் அவனுடைய தாய் அவளிலும் ஐந்து வயது குறைந்த பக்கத்து ஊரைச் சேர்ந்த பொடியனோடு ஒடிப்போய் விட்டாள்.அதன்பின் அவனுடைய வாழ்வில் பல மாற்றங்கள் ஏற்பட்டன.அவனுடைய மாமியார் அவனையும் அவனுடைய தங்கையையும் தன் பொறுப்பில் வளர்க்கத் தொடங்கினாள். குமாருடைய கல்லூரிப் படிப்பை அவனுடைய மாமியர் நிறுத்திவிட்டு யாழ்ப்பாணத்திலுள்ள புடவைக்கடையில் சேர்த்து விட்டாள்.சில வாரத்திலேயே கடையில் களவெடுத்ததாக அந்தக் கடை முதலாளி வேலையிலிருந்து அவனை நீக்கிவிட்டார்.
இந்திய இராணுவம் யாழ்ப்பாணத்தில் புலிகளோடு அடிபட்டுக் கொண்டிருந்த போது, சனங்களெல்லாம்   அகதி முகங்களுக்கு செல்ல,இவனோ இரவோடு இரவாக கூப்பன் கடையை உடைத்து அதற்குள்ளிருந்த பொருட்களையெல்லலாம் எடுத்து விற்றான்.அத பற்றி அவனிடம் கேட்ட போது,அவன் சொன்னான்‘இது அரசாங்கச் சொத்து அதலை எடுத்தன்’ என்றான். இப்படிச் சின்னச் சின்னக் களவென்று நிறையச் செய்தான்.
பொல்பொட், மாவோ, சே,காஸ்ட்ரோ என்ற பெயர்களை அடிக்கடி உச்சரிக்க தொடங்கினான்.கணவனால் கைவிடப்பட்ட இரண்டு குழந்தையின் தாயைக் காதலித்து அவன் திருமணமும் செய்து கொண்டான். அவன் அவளை காதலிக்கிற போது, தான் இயக்கத்தில் இருப்பதாக ஒரு பொய்யைச் சொல்லி வந்தான். அதை அவள் உண்மையாகவே நம்பி விட்டாள்.  யாழ்ப்பாணத்தில் இயக்கம் இருந்த காலத்தில் எப்படி யாழ்ப்பாணத்திலுள்ள பெண்களுக்கு அவர்கள் மீது பரிவும் பயமும் இருந்ததோ அதேபோல் இவளுக்கும் அவன் மீது  இருந்தது.
தன்னை ஒரு இடதுசாரி என்றே சொல்லி வந்தவன், ஆனால் சைவ முறைப்படியே திருமணம் செய்து கொண்டான். திருமணம் நடந்த அன்றிரவே அவன் மனைவி தேவி காதுக்குள் முணு முணுக்கத் தொடங்கினாள். தூங்குவதற்காகப் பாயில் குமார் மல்லாந்து கிடந்த போது அவள் கேட்டாள் ‘ஏதும் ஆயுதம் சட்டைக்கில்ல வைச்சிருக்கிறீயா...?’ அவன் சிரிச்சுக் கொண்டே ‘அடியே விசரி…நான் இயக்கத்துக்கு துண்டு குடுத்து விலகிட்டேன்.மக்கள் போராட்டம் ரொம்ப நாளாகுமாம் அதுவரைக்கும் நான் காத்திருக்கேலாதெண்டு விலகிட்டன். இப்ப என்னட்ட ஒண்டுமில்லை.’ என்று அவன் சொல்ல. ‘நான் நம்ப மாட்டேன்’ என்று அவள் சத்தம் போட அவன் தன்னை நிர்வாணப்படுத்திக் கொண்டான். அதன் பின்னர் தான் அவள் அவனுக்கு அருகில் போனாள்.
வருடம் தவறாது பிள்ளைகளைத் தேவி பெற்றுக் கொண்டேயிருந்தாள் .ஏற்கனவே இருந்த இரண்டு பிள்ளைகளோடு குமாருக்கு இன்னும் மூன்று பிள்ளைகள் பிறந்து மொத்தம் ஐந்தாகியது. குமார் கல்யாணம் கட்டிய நாட்களிலிருந்து எந்தவித வேலைக்கும்போவதில்லை.தேவியோடு  உடன் பிறந்த சகோதரர்கள் நான்குபேர். இருவர் கனடாவில் இருக்கிறார்கள்.ஒருவர் பிரான்சிலும் மற்றவர் ஜேர்மனியிலும் இருக்கிறார்கள். இதைவிட ஊரில்  இரு சகோதரிகள் இருக்கிறார்கள்.வெளிநாட்டில் வாழும் நான்கு சகோதரர்கள் அனுப்பி வைக்கிற வெளிநாட்டுப் பணத்திலேயே குமார் குடும்பம் நடத்தி வந்தான்.
குமார் செய்த சில தவறுகளுக்காக ஒரு நாள் இயக்கம் பிடித்துக் கொண்டு சென்று அடித்ததோடு விட்டு விட்டார்கள். அதன் பிறகு வீட்டிற்கு வெளியில் வராமல் இருந்த குமாரைத் தேவி சமாதானப்படுத்தி வெளிநாட்டுக்கு அனுப்புவதற்காகக் கொழும்புக்குக் கூட்டி வந்தாள்.சில நாட்கள் இருவரும் ‘லொட்சில்’ தங்கியிருந்தார்கள்.  குமார்  கனடாவிற்கு போகிற விடயம் தாமதமாகிய காரணத்தால் தேவி குமாரை ‘லொட்சில்’ இருக்க சொல்லிவிட்டு   ஊருக்குத் திரும்பி விட்டாள். அது அவனுக்கு வாய்ப்பாக அமைந்தது.தன்னுடைய வழக்கமான குழப்படியைச் ஆரம்பித்தான் குமார். மாதந்தவறாது குமாருக்கு வெளிநாட்டுப் பணம் வந்து கொண்டிருக்கும் .அந்தப் பணத்தை எப்படியெல்லாமோ  சீரழிச்சான். ஒவ்வொரு நாளும் ஆறுமணிக்குப் பிறகு குடிபோதையிலேயே இருப்பான்.நிறைய நண்பர்கள் அவனோடு நட்பாக இருந்தார்கள்.
றஞ்சினி என்ற யாழ்ப்பாணத்து பெண் வெளிநாடு போவதற்காக் கொழும்பு கொச்சிக்கடை றெட்ணம் றோட்டில் அவர்களுடைய உறவினர் வீட்டில் தங்கியிருந்தாள். அடிக்கடி பக்கத்தலுள்ள கொச்சிக்கடை அந்தோனியார் கோயிலுக்கு முன்னால் இருக்கும் சிவன் கோயிலுக்கு போய் வருவாள். அவளை கோயிலில் சந்தித்த குமார் தான் இன்னும் கல்யாணம் செய்யவில்லையென்றும்,தமிழ்ஈழம் கிடைக்கும் வரை தான் கல்யாணம் செய்வதில்லை என்ற முடிவோடு இருப்பதாகவும் அவளுக்கு சொன்னான். வெளிநாட்டில் இருக்கிற தன்னுடைய அண்ணன்மார் தன்னை எடுக்கப் போவதாகவும் அதற்காகத்தான் கொழும்பில் காத்திருப்பதாகவும் கதை விட்டு இல்லாத பொல்லாத பொய்யெல்லாம் சொல்லி அவளைத் தன் வசப்படுத்தினான். அவளுக்கும் குமாருக்கும் காதல் கசிந்து வழிந்தது. றஞ்சினியும் அவனுடைய கதையை நம்பி அவன் பின்னால் திரிந்தாள். நல்ல சாப்பாடு,  தமிழ்படம், உடுப்புகள், காசு என்று பல்வேறு வகைகளில்அவளை அவன் சந்தோஷப்படுத்தினான்.
றஞ்சினி கோயிலுக்குப் போய் வரும் போது ஒரு தெய்வீகக் களை அவள் முகத்தில் படிந்திருக்கும். பா.ராகவனின் நெற்றியில் கிடக்கும் திருநீற்றின் அளவு போல் அவள் எப்போதும் கோயிலுக்குப் போய் வரும் போது  பூசிக்கொண்டு வருவாள். நல்ல பண்பான குடும்பத்தில் பிறந்து நல்ல பழக்க வழக்கத்துடன் இருந்தவள் எப்படிக் குமாரின் பொய்யான வார்த்தைக்களுக்குள் விழுந்திருப்பாள்?  வெளிநாடு செல்வதற்காக கொழும்பு வரும் பெண்கள் இப்படி எத்ததனையோ பேரால் ஏமாற்றப்பட்டிருக்கலாம் யாருக்கு தெரியப் போகிறது.வெளியில் சொன்னால் வெட்கம் என்பதற்காக சிலர் மறைத்திருக்கலாம்.
ஒரு நாள் பின்னிரவு றஞ்சினியின் வீட்டிற்கு வந்த இலங்கை பொலிஸ் உளவுப் பிரிவைச் சேர்ந்த  இருவர் றஞ்சினியை ஒருவாகனத்தில் ஏற்றிக்கொண்டு போய் விட்டார்கள். குமார்அவளைப் பார்ப்பதற்காக கோயிலில் தேடியலைந்தான்.தொடர்ந்தும் அவள் வரவில்லை என்று தெரிந்த போது அவள் தங்கியிருந்த வீட்டிற்குச் சென்றான்.அங்கே இருப்பவர்கள் றஞ்சினிக்கு என்ன நடந்தது என்ற தகவலை கவலையோடு விபரமாக அவனுக்குச் சொன்னார்கள்.
அந்த வீட்டிற்கு போய் வந்த நாளின் பின் அவன் நிறையவே குடிக்கத் தொடங்கினான். கவலைப்பட்டான். கண்ணீர் விட்டான்.ஒரு சில வாரத்தில் அவன் இயல்பு நிலைக்கு வந்தான்.அதன் பின்அவளை அடியோடு மறந்து விட்டான்.றஞ்சினி எங்கேயிருக்கிறாள்…? அவளுக்கு என்ன நடந்திருக்கும் என்ற எந்த யோசனையோஅல்லது அவளை வெளியே எடுக்க வேண்டுமென்ற எந்தவித முயற்சியோ அவன் எடுக்கவில்லை.
நான் கனடா வந்து இறங்கிய கொஞ்ச நாட்களுக்குள் அவனும் வந்து சேர்ந்து விட்டான். வந்தவுடன் எப்படியோ என்னைத் தேடிப் பிடிச்சு என்னோடு ஒட்டிக் கொண்டான். மார்க்கத்தில் ஒரு தமிழ் குடும்பத்தின் வீட்டில் குமார் வாடகைக்கு ஒரு றூமை எடுத்து தங்கியிருந்தான். அந்த வீட்டாரைப் பற்றி நிறைய முறைப்பாடுகள் எனக்குச் சொல்லுவான். சாப்பாடு கொடுப்பதிலிருந்து தன்னைச் சரியாக கவனிப்பதில்லை வரை வாய் வலிக்காமல் சொல்லிக் கொண்டிருப்பான். ஒருநாள் என்னை தானிருக்கும் வீட்டிற்குக் கூட்டிச் சென்றான். அவனுடைய வீட்டுக்காரர் என்னை வைத்துக் கொண்டே பகிடியாக இவனுடைய திருகுதாளம் பற்றி சொன்னார்கள்.அவன் சிரித்து மழுப்பிக்கொண்டிருந்தான்.ஒன்று மட்டும் எனக்குச் நன்றாகவே விளங்கியது, அவன் வாடகைக் காசு ஒழுங்காக கொடுப்பதில்லையென்று.
குமார் வாடகைக்கு இருக்கும் வீட்டார், பிறப்பால் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள். கனடா வந்த பின் ஏதோ காரணத்திற்காக கத்தோலிக்க மதத்தில் சேர்ந்து விட்டார்கள்.  கிறிஸ்தவ அறத்தில், சமயக் கருத்துக்களில் மிகவும் இறுக்கமாக  இருந்தார்கள்.குமாரைப் பாவத்துக்கு இரங்கித்தான் வீட்டில் வைத்திருக்கிறார்கள் போல எனக்குத் தெரிந்தது.
நான் அவனைக் கனடாவில் சந்தித்து மூன்று மாதத்தின் பின் குமாரின் ஸ்பொன்சரில் அவனுடைய மனைவியும் ஐந்து பிள்ளைகளும் இங்கு வந்து விட்டார்கள். தனி அறையில் இருந்த குமார் மூன்று அறை கொண்ட தொடர்மாடிக்கு மாறிவிட்டான்.குடும்பம் வந்தவுடனேயே வெல்வயருக்குப் போய் விட்டான். அவனுக்கு அரசாங்கம் கொடுக்கும் பணம் ஒரளவு போதும். ஆனால் குமாருடைய குளப்படியாலும், செலவுகளாலும் கொடுக்கிற பணம் அவர்கள் குடும்பத்திற்கு போதவில்லை.
தேவி கனடா வந்த பின், யாருடைய உதவியையும் எதிர்பார்க்காமல் எல்லாக் காரியங்களையும் தானாக செய்யப் பழகிக் கொண்டாள்.கிழமை நாட்களில் தன்னுடைய பிள்ளைகளை பாடசாலைக்கு கூட்டிப் போவதும், வருவதுமாக அவளுடைய நாட்கள் கடந்தன.இங்குதான் ஒரு தமிழ்ப்பையனோடு நட்பு ஏற்பட்டது.அடிக்கடி அவள் சந்திப்பதோடு, வீட்டில் குமார் இருக்கும் போதும் அவனோட அவள் கதைத்தாள்.
குமாருக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் எனக்குப் போன் பண்ணுவான்.அவன் என்னோடு நிறையவே கதைக்க வேண்டுமென்று நினைப்பான்.சில வேளை நேரிலும் வந்து சந்தித்துக் கதைப்பான். அவனுக்கு ஆறுதல் அளிப்பது என்னுடைய வார்த்தைகள்தான் என்று அவன் உணர்ந்திருந்தான். அவனுடைய முறைப்பாடுகளில் முக்கியமானது அவனுடைய மனைவி பற்றியது.அவள் எந்த நேரமும்  தொலைபேசியில் யாரவது ஒருவரோடு கதைத்துக் கொண்டிருப்பது. அது அவனுக்கு அடிப்படையில் பிடிக்கவில்லை . குறிப்பாக ஒரு இளைஞனோடு தொடர்ச்சியாகக் கதைக்கிறாள் என்று எனக்குச் சொல்லி வந்தான். நான் கேட்டு விட்டுச் சிரிப்பேன்.நான் சிரிப்பதைப் பார்த்தால் அவனுடைய மூளிகண்ணைக் கொஞ்சம் அகலமாக விரிச்சுக்கொண்டு கோபமா என்னைப் பார்ப்பான்.அப்படிஅவன் பார்க்கும் போது கண் விழிகள் வெளியில் விழப் போகிறது என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு நான் சிரிப்பதை  நிறுத்தி விடுவேன்.
கடும் குளிரோடு காற்று முனகியது.உயிர் குளிரில் மரணித்துக் கிடந்தது. நெருப்பை உடல் முழுவதும் அள்ளிப் பூசினாலும் அந்தக் குளிரைத் தாங்க முடியாது போல் என் உடல் விறைத்துக் கிடந்தது.இந்தக் கடும் குளிருக்குள் தான் நானும், அ.முத்துலிங்கமும், வரனும்,காலம்செல்வமும் தமிழ்நாட்டிலிருந்து  அமெரிக்கா வந்திருந்த ‘தேவிபாரதி’யை சந்தித்துவிட்டு அதிகாலையில்தான் வீடு திரும்பினோம் . வந்தவுடன் நான் குளிக்காமலேயே தூங்கிவிட்டேன்.
அதிகாலை நாலு மணியிருக்கும், தொலை பேசி மணி கிணுகிணுத்தது.யாரு இந்த நேரத்தில் போன் பண்ணுவார்கள்… என்று நினைத்துக் கொண்டு மற்றப் பக்கம் திரும்பிப்படுத்து விட்டேன். மீண்டும் தொலை பேசி மணி அடித்தது. உடல் எங்கும் சோம்பலோடு அச்ச உணர்வு ஊரத் தொடங்கியது. கண்ணைக் கசக்கிக் கொண்டு தொலை பேசியில் விழுந்த இலக்கங்களைப் பார்த்ததும் மனதில் சலிப்பு ஏற்பட்டது.  என்னுடைய நண்பன் குமார்தான்அழைத்தான். ஏன் இந்த நேரத்தில் இவன் எடுக்கிறான் என்று யோசித்துக் கொண்டு தொலை பேசியை எடுக்காமல் மீண்டும் திரும்பி எதிர்ப் புறமாகப் படுத்து விட்டேன். திரும்பத் திரும்பத் தொடர்ந்து எடுத்துக் கொண்டிருந்தான். நான் எரிச்சலோடு தொலை பேசியை எடுத்தேன். நான் உடனே எடுக்காதற்கு முதலில் எரிந்து விழுந்தான்.திரும்பிச் சொன்னான்.
“நான் என்ர மனுசியோட பெரிய பிரச்சினைப்பட்டுட்டேன். உன்னோட நிறையக் கதைக்க வேணும் உன்ர வீட்டவரணும்” என்றான்.
“அதுக்கென்ன வாவன்.எப்படியடா வரப் போற..?”என்று நான் கேட்டேன்.
“பஸ்சிலதான்”
“வீட்டு முன் கதவை உள்ளால திறந்து விட்டுட்டு நான் படுக்கிறன்.நீ உள்ள வந்து என்னை எழுப்பாமல் ரீவியை மெதுவாகப் போட்டுக் கொண்டிரு.. நான் நித்திரையால எழும்பின உடனே எல்லாத்தையும் விபர சொல்லு.”என்று சொல்லிவிட்டுத் தொலைபேசியைத் துண்டித்தேன்.
பூட்டியிருந்தகதவை உட்பக்கமாகப் திறந்துவிட்டிட்டு நான் மீண்டும் தூங்கிவிட்டேன்.
நான் பகல் பத்துமணிக்கே படுக்கையிலிருந்து எழுந்தேன். குமார் சோபாவில் தூங்கிக் கொண்டிருந்தான். நான்குளித்து விட்டு வெளியில் போவதற்காக ஆயத்தப்படுத்தினேன்.அவன் என்னுடைய காலடிச் சத்தம் கேட்டு விழித்துவிட்டான்.நான் அவனுக்குப் பக்கத்தில் உட்காந்தேன்.அவன் முகத்தைப் பார்த்ததும் பதற்றமானேன்.
“என்னடா முகத்தில நடந்தது..?”
“என்ர பொஞ்சாதியும் அவட முதல் தாரத்து மூத்த பிள்ளையும் சேர்ந்து அடிச்சுப் போட்டாளுகள்.”
“நீ என்ன செய்தனீ..?”
“வழமை போலவே என்னைக் கணக் கெடுக்காமல் யாரோ பொடியனோடு கதைத்துக் கொண்டிருந்தாள், அதுதான் அடிச்சனான்…. அவளுக்கும் நல்ல காயம் வைச்சிட்டன்.அதுக்குத் தான் அவளுகள் இரண்டு பேரும்  பிச்சுப் பிறாண்டிப் போட்டாளுகள்! என்ன வீட்டிலை இருக்கக் கூடாது எண்டு  என்ர மனுசி  என்னை வெளியில கலைச்சுப் போட்டாள்.நான் ஊருக்குப் போறதுக்கு ரிக்கற் புக் பண்ணிட்டன் இண்டைக்கு பின்னேரம் ஐஞ்சு மணிக்கு பிளைட்..
“ஏன்டா அவசரப்படுகிறாய்?”
“நான் முடிவு செய்து போட்டன் அதை விடு,ஒரு விசயம் உன்னட்டைக் கேக்கிறன் பதில் சொல்லு…!,
 நான் இந்தச் சோபாவில படுத்துக் கிடக்கேக்கில ஒரு கனவு கண்டனான்…கடல் யோசிச்சுக் கொண்டு இருக்குதாம் என்னைச் சுனாமி போல வந்து அழிக்க... இந்தக் கனவின்ர அர்த்த மென்னடா மச்சான்..? “நீ போறனெண்டு முடிவெடுத்திட்ட பிறகு ஏன்ர கண்டமாதிரி பயப்படுற..பயப்படமல் இரு.”
 நான் சிரிச்சுக் கொண்டு “சரி வா கோப்பிக் கடைக்கு போவம்.” என்றேன்.அவன் எந்த மறுப்பும் சொல்லாமல் எழுந்து வந்தான்.
கோப்பிக் கடைக்கு முன்னால் காரை நிறுத்தி விட்டு, இருவரும் நடந்து வந்து கடைக்குள் போவதற்காகக் கதவை நான் திறக்க கண்ணாடிக்குள்ளால் கவுண்டரில் நின்ற ஒரு தமிழ்ப் பெண்ணைக் குமார் கண்டதும் சட்டென  முகத்தை மறைத்துக் கொண்டு என்னுடைய காரை நோக்கி அவன் விரைந்து நடந்தான்.
நான் கோப்பியை அவனுக்கும் சேர்த்து வாங்கிக் கொண்டு வந்து காருக்குள் ஏறினேன். அவன் சிரிச்சுக் கொண்டு என்னைப் பார்த்தான்.’ஏன்டா குமார் அந்தப் பொட்டையை பார்த்தவுடன ஓடி வந்தன்னீ’அவன் புன் சிரிப்போடு‘அவள் தான் என்ர பழைய ரஞ்சினி.கொழும்பில சிறிலங்கன் சீஜடி பிடிச்சுக் கொண்டு போனது என்டு சொன்னன் ஞாபகம் இருக்குதா? என்றான். அது உன்ர பழைய காதலியல்ல..   அவளா    இவள்..? என்று ஏக்கத்தோடு கேட்டேன்.அவன், ம்… என்று இழுத்தான்.   நான் உறைந்து போனேன்.
                                                                    (முற்றும்)
நன்றி; தமிழர் தகவல்,லண்டன்
பொங்கல் சிறுகதைச் சிறப்பிதல்


எரியும் இரவுகள்

எரியும் இரவுகள்

                                                     -Aj Danial- 

-------------------
 விரிந்து பரந்த வான்வெளி 
மேகக்கூட்டங்களின் பவனி
கண்ணுக்கு எட்டிய தூரம் வரை 
இன்னுமென் கண்களுக்குள் அகப்படா 
மெய்ப்பொருளாய் அந்த வட்ட நிலா

சில் வண்டுகள் காதுகளை 
வட்டமிட்டு ரீங்காரமிடுகின்றது
வானவெளியில் நாரைக்கூட்டங்களின்
ஊர்வலமிடையே நாடு தாண்டும்
சைபீரியக்கொக்குகள் வகை வகையாய்
விரிந்த வான வெளியில்
எங்கிருந்தோ கருமுகிற்கூட்டம்
ஒளியை விழுங்கிற்று...!!

நீண்டு பரந்த சாலையெல்லாம் 
அடங்கி அமைதியாய் 
நான் மட்டும் அமைதியின்றி மனம்
வெம்பி வேதனையின் உச்சியில்
பருவ மோகம் தீக்குழம்பாய் 
உடல் முழுதும் பரவ 
காதல் கண்களின் விழிம்பில் 
எட்டிப்பார்த்து எளனம் செய்கின்றது
வெட்கத்தில் தலை குனிந்து 
மொட்டை மாடிப் பலகணியில்
ஒற்றையாய் நான் மட்டும்...!

தூரத்து தெரு விழக்குகள் 
மின்மினிபூச்சிகளாய்
கொஞ்சம் குளிர்காற்று
உடலை தொட்டுச்செல்ல 
உடலின் செல்கள் எல்லாம் 
என்னோடு மல்லுக்கட்டுகின்றது
கைகளால் உடலைத்தடவிப்பார்கின்றேன்
இடக்கையில் அகப்பட்டது
அவள் கொடுத்த கடிகாரம்
நேரத்தை நோட்டமிடுகின்றேன்
நேரம் 12.30 அதிகாலை 

கண்கள் எரிகின்றன
தூக்கம் கண்களோடு
முட்டிமோதி ஈழப்போர் 
செய்கின்றது
நானோ அப்பாவித்தமிழனாய் 
ஐ நா வை எதிர்பார்த்து
கதிகலங்கி நிற்கின்றேன்
எப்போ வருமப்பெண் நிலா?

ஓர் மெல்லிய தென்றல்க்காற்று 
தேகத்தை உரசிச்செல்ல
என் தேகமெல்லாம் சிலிர்த்தது
என் இதயத்தில் தேங்கி இருக்கும்
நினைவுகளை மீட்டுப்பார்த்தது.

உன் கருங்குழல் நறுமணம்
காற்றோடு கலந்து 
வழியெல்லாம் நறுமணமாக்கி
உன்வருகையை என்னிடம்
உறுதிசெய்தது

கட்டியணைத்து தலை கோதி
உதட்டில் ஈர முத்தம்
உன் காது மடலோரம் 
மெல்லிய உரசல் 
கூச்சத்தில் நீ 
என் மூச்சுக்காற்று
உன் மூச்சோடு கலந்தது 
உன் காந்தக்கண்கள்
மௌனமொழி பேசிற்று
ஈருடலும் ஓருடலாய் அன்று
சூடான முத்தத்தைப்
பரிமாறினோம் 
இரு கைகளும் இணைந்தது
என் மார்பில் முகம்
புதைத்தாய் 
மோகத்தீ உச்சத்தில்

உன் கழுத்தின் நடுவே 
மார்பின் வடக்கே
அழகான சிறுமச்சம்
உன் வளைந்த கைகள் என்
உதட்டின் வல்லமையால்
மன்மத வீணையானது நீ 
நெளிந்து குழைந்து
தலையை என் படர்ந்த
 மார்புக்குள்ப்புதைத்தாய்
காதல் தீ பற்றி எரிய 
நட்ட நடுநிசியில்இருவரும் 
இன்ப யாகம் நடத்தினோம்

இவ்வுலகம் நம் கைகளில்
இந்த இரவினை ஆளும் 
ராணியாய்  நீ பதவியேற்றாய்
நான் மோகத்தீயை வளர்த்தேன்
அந்த இரவும் வெட்கப்பட்டது அன்று
உன் உதட்டின் சாயம் அமிர்தமாய் அகிற்று
என் மார்பில் நீ கோலமிடும் கிராமத்துப்
பெண்ணாய்  அன்று 
என் முழு இரவினை 
அலங்கரித்தாய்.

தொட்ட இடமெல்லாம் சூடு
இருவரது முத்தத்தைப் 
பரிமாறினோம் 
தேங்கிய சூடான முத்தம்
மடை உடைத்துப்பாயும் ஆறாய் 
பொங்கிப்பாய்ந்தது
மடையடைக்கும் பணியில் நீ
பெண்ணுக்குரிய சிறந்த பண்பு
அன்று உன்னில் கண்டேன்
அந்த இரவும் நம்மிடம் தோற்றது
இறுதியில் நீயே எனை வென்றாய்...

தோற்றது நான் தான் அன்பே
அதிலும் கர்வம் கொள்கின்றேன்
நம் காதல் வென்றது
ஜென்மங்களில் நம்பிக்கையில்லை
வாழ வேண்டும் நம் காதல் 
மூச்சு இருக்கும் வரை 
வா நிலா வா !!
வாழ்ந்துதான் பார்க்கலாம்.....

-Aj Danial-



இருப்பும் இழப்பும்

இருப்பும் இழப்பும்

செ.டானியல்ஜீவா

         
கனிமொழி ஏதோ அவசரம் அவசரமாக ஓடித் திரிந்தாள். கோபத்தில் மூத்த பையனுக்கு இரண்டு அடியும் போட்டாள். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அந்தோனியார்; கோயிலுக்கு, பத்துமணி பூசைக்காவது போய் விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டு சுறுசுறுப்பாக வீட்டு வேலை யைச் செய்து கொண்டி ருந்தாள். மளமளவென்று தேநீர் தயாரித்தாள். கனிமொழியின் கணவன் தாசன், முன் விறாந்தையில் இருந்து தொலைக் காட்சியில் ஐஸ்கொக்கி பார்த்துக் கொண்டிருந்தான். இரண்டாவது பிள்ளை கவிதா குளியல் அறையிலிருந்து அம்மா’’ என்று அழைத்தாள். என்ன என்று கனிமொழி கேட்பதற்குள் அழுது கொண்டு நின்ற மூத்தவன் மாறன் அம்மா! தங்கச்சி கக்காவிற்கு இருந்தவள். அதான் கழுவ வரட் டாம் எண்டு கத்துறாள்’’ என்றான். கொஞ்சம் பொறுக்கச் சொல்லு’’ என்றாள். மாறன் காதில் வாங்கிக் கொண்டு குளியலறையை நோக்கிப் போனான்.
                                  கனிமொழி வேலைக்குப் போகவில்லை என்பதைத் தவிர அனைத்து வேலைகளையும் அவளே சுமக்க வேண்டும். மூத்தபொடியன் ஒரு இடத்தில் இருக்க மாட்டான். எதையாவது தோண்டிக் கொண்டேயிரு ப்பான். அதுவும் பாடசாலை இல்லாதவேளை அவனுடைய துடியாட்டம் தாங்க முடியாது. அதனால் அவள் படும்பாடும் சொல்லவே முடியாது. சின்னவள் அவனைவிடத் துடியாட்டம். எப்போதும் தாய் கூடவே இருக்க வேண்டும் என்ற பழக்க முடையவள். கொஞ்ச நேரம் விட்டு விலக முடி யாது. கனிமொழியின் கையைப் பிடித்தபடியே திரிவாள். அவ்வப் போது வரும் தொலைபேசியில் நண்பிகளிடம் உரையாடுவதிலும், நாடகம், சினிமாப்படம் போன்றவற்றில் அவள் மனம் லயித்து இருந்த போதும் உள்ளம் எப்போதும் சோகத்தைச் சுமந்தபடியே இருக்கும்.  மூத்தவன் வயி ற்றில் இருக்கும் போதுதான் அவள் கனடா வந்தாள். அந்த வருகை கூட திடீரென எழுந்த எண்ணம்தான். அவள் கனடாவிற்கு வருவாள் என்று துளிக்கூட நினைக்கவில்லை. தாசனைத் திருமணம் செய்தது தவிர்க்க முடியாமல்தான். அதை இப்போது நினைத்தாலும் நெஞ்சு வெடித்துவிடும் போல் அவளுக்கு இருக்கும். 
                                                                      கனிமொழி சந்திரனைக் காதலித்தாள். சந்திரனா....? யாரு பள்ளிக்கூட வாசனை தெரியாதவனா....? அந்தக் கடல் காகமா....? போயும்போய் அந்தப் பொடியனையா, நம்ம வீட்டில் மாப்பிள் ளையாய் எடுக்கிறது. இதெல்லாம் நடக்கிற காரியமா? எங்கட அந்தஸ் துக்கு ஏற்ற மாப்பிள்ளையைத்தான் கட்டித் தருவோம். நான் ஒன்னப் பெத்த போதே உனக்கு உத்தியோக மாப்பிள்ளையைத்தான் செய்து கொடுக்க வேண்டுமென்று கனவு கண்டேனடி.... அந்தக் கனவை நனவா க்கத்தான் இப்ப நினைக்கிறன். நம்மட தலைமுறையே மீன்பிடிச்சு.... மீன் பிடிச்சு வாழ்ந்து வந்தவங்க.... உனக்கு உத்தியோக மாப்பிள்ளையைத் தேடிக் கொடுத்தாவது அந்த நிலையை மாத்த வேண்டும் எண்டு நினைப்ப தில் என்ன தப்படி...? அதுக்குள்ள.... குணக்கடியேதும் காட்டினாய் எண் டால் நடக்கிறதே வேற.....’’ இது அம்மாவின் அகங்காரத்தில் வந்த வார்த்தைகள். ”ம்....’’ எல்லாத் திட்டித் தீர்த்தலுக்கும் மௌனம் காத்தாள் கனிமொழி. இதயம் அழுது அழுது ஈரமாகியது.
”என்னடி! ஊமமாரியாச்சி மாதிரி ஒண்டும் பறையாமல் நிக்கிற...’’ ஏதும் எங்களுக்குத் தெரியாம செட்டப் பண்ணீட்டியோ...?’’ 
மௌனமாய் இருந்த கனிமொழி வாய் திறந்தாள். 
"னேய் அம்மா.... எனக்கு வீட்டைவிட்டு சந்திரனோடு ஓடுவதெண்டால் எப்போவோ ஓடியிருப்பன். நம்முடைய குடும்பக் கௌரவம் காற்றில் பறக்கும் எண்டு தான் இன்றுவரை பொறுத்திருக்கிறன். சந்திரனிலை என்ன குறைச்சலை நீங்க கண்டனீங்க....?’’
"அவன் எங்கட குடும்பத்துக்குப் பொருத்தமில்லாதவன்’’
"பொருத்தம் எப்படிப் பார்க்கிறீங்க வெறும் உத்தியோகத்தை வைத்தா...? சந்திரன் படிக்கல்ல, கடலுக்குப் போறவன் நான் ஒத்துக் கொள்றன். ஆனா அவன் எல்லாத்தையும் விட நல்ல மனிதன். அந்த உள்ளத்தைத்தான் என் மனம் விரும்புதும்மா. அது என்ன தவறு?’’ 
கனிமொழியின் தாய் கனிமொழியை நெத்திமுட்டாய்ப் பார்த்தாள். "உனக்குப் பேசியிருக்கிற மாப்பிள்ளை உயர்ந்த உத்தியோத்தில இருக்கிறவன். நம்மட சாதி திமில் சாதி.... மீன்பிடிக்கிற சாதி... என்ர மருமகன் உத்தியோகம் பார்க்கிறார்; எண்டால் யாருக்கு சாதி தெரியப் போகுது, எங்களுக்கு எவ்வளவு பெருமையாய் இருக்கும். நீ சொல்லுற சந்திரனைப் பார்த்தாலே சாதி தெரியுமடி’’ ஆழ் மனதிலிருந்து சாதியும், உத்தியோகமும் சேர்ந்து உக்கிரமாய் வார்த்தையில் தெறித்தது.
"சாதியென்ன சாதி... மனுசன்ர மனம் சரியாய் இருந்தால் போதும்... அவர் எனக்கு எல்லா வகையிலும் பொருத்தமானவர். எனக்கு ஒண்டெண்டால் அவர்; மனசு தாங்காது. அவருக்கு ஒண்டெண்டால் என்மனசு தாங்காது. அப்படியிருக்கும் போது என்னெண்டு இன்னொருவருக்கு தலையை நீட்டுறது....’’
“அடி செருப்பாலை... மூஞ்சி முகறக் கட்டையெல்லாம் உடைச்சுப் போடுவன். முகத்தால ஆணம்வர தருவனடி.... கொப்பற்ற குணம் தெரியாதோ. இவ்வளவும் கேள்விப்பட்டாலே தோலுரிச்சுப் போடுவார். உன்ன கொலை செய்யவும் பயப்படமாட்டாரடி....’’ அம்மாவின் திமிரில் தெறித்த வார்த்தைகள். மௌனமாய் எப்போதுமே இருந்து பழக்கப்பட்ட கனிமொழி தாயின் வார்த்தைக்கு தொடர்ந்து மறுவார்த்தை பேசாது.
தாயின் எச்சரிக்கையான வார்த்தைக்குப் பின்னும் எப்படித்தான் அவளால் மறுத்துப் பேச முடியும். அவள் தாயோடு எப்போதும் மறுத்துப் பேசுவது குறைவு. தாயின் மீது மிகவும் அன்பும் மரியாதையும் வைத்திருக்கிறாள். கீழேயிருந்த கனிமொழி எழுந்தாள். வேட்டுத் தீர்ப்பதற்கு முன்னால் வரும் ஒளிப்பீச்சி போல் முகம் பிரகாசமாய் இருந்தது. குனிந்த தலை நிமிர்ந்தது. நேரிடையாகத் தாயைப் பார்த்தாள். கண்களில் கூரிய பார்வை. மனதில் தெளிவான சிந்தனை....
"அம்மா!”
"என்னடி....’’
"நீங்க நெனச்ச மாப்பிள்ளையையே கல்யாணம் செய்யிறனணை...’’ 
தாய் மலைத்துப் போனாள். இந்த முடிவுக்காகத்தானே இத்தனை நாளாகத் காத்திருந்தேன் என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டாள். அதுதானே பார்த்தேன்... என்ர புள்ளையாச்சே...’’
அதன்பின் கனிமொழி, தாசனுக்கு வாழ்க்கைத்துணையானாள்.
தொலைபெசி கிணுகிணுத்தது. தோலை பேசிச் சத்தத்தில் பழைய நினைவுகள் தொலைந்து போய் சுயநினைவுக்கு வந்தாள்.
"கலோ...’’
மறு முனையிலிருந்தும் கலோ...’’
"புள்ள நேற்றுத் தந்த காசு கொடுத்தாச்சா மோனை?’’
"இல்லையெணை.... இனித்தான் கொடுக்கப்போறன். அவர்ட்ட காசைக் கொடுத்துவிட்டு என்ன சொல்லுறார்; எண்டு திருப்பி ரெலிபோன் எடுத்து சொல்லுறனணை. இப்ப புள்ள குளியலறையிலிருந்து கத்திறாள். சின்னவளுக்கு போத்தலில் பால் ஊத்தி தண்ணியிலை ஆறவிட வேண்டும். கோயிலுக்கு போறத்துக்கு பிள்ளையளைக் குளிக்கவாத்து உடுப்புகள் போடணுமன....’’
"உன்ர புருசன் என்னடி செய்யிறார்?’’
"அவரைப் பற்றி உனக்குத் தெரியாதோன! பார்த்துக் கொண்டிருக்கிறார்;... ஐஸ்கொக்கி பார்க்கிறதெண்டால் அவருக்கு பைத்தியமணை...’’
"என்ன பைத்தியமாக இருந்தாலும் வீட்டில இருக்கிற சின்னவேலைகூட செய்யிறது இல்லையா...?’’
.... மௌனம் காத்தாள் கனிமொழி
"என்னடி மோனை ரெலிபோனை வைச்சுக்கொண்டு கதையாமல் இருக்கிறாய்...?’’
ஒரு கணம்தான் தாயின் குரல் கேட்டு சுயநினைவுக்கு வந்தாள்.
"ஒண்டுமில்லையணை.... திரும்ப எடம்மா இப்ப கோயிலுக்கு போகணுமன...’’ என்று சொல்லிக் கொண்டு கனிமொழி தொலைபேசியைத் துண்டித்தாள்.
மீண்டும் சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்கினாள். பிள்ளைகளைக் குளிக்கவாத்து, உடுப்புகளைப் போட்டுவிட்டு, குசினிக்குள் வந்தாள். இரண்டு கப்பில் 
தேத்தண்ணியை ஊத்தினாள். ஒரு கப்பில் தாசனுக்கும், மறுகப்பில் தனக்கும் தேத்தண்ணியோடு குசினியைவிட்டு முன் விறாந்தைக்கு வந்தாள். இடது 
கையில் வைத்திருந்த கப்பிலிருந்த தேனீரை ஒரு தடவை உறிஞ்சிக் குடித்தாள். வலது கையில் வைத்திருந்த கப்பை தாசனுக்கு நீட்டினாள். தேனீரை 
வாங்குவதற்கு நிமிர்ந்த தலை ஒரு கணம் விசம் ஊறியது. ஒரு முறட்டுப் பார்வை, சினிமாவில் வரும் அசல் வில்லன் பார்ப்பது போல்... கோபத்தை 
உள் மனதில் தேக்கிக்கொண்டு,
"என்னவாம் உங்கடம்மா...?’’
"நம்மட கல்யாணத்தில பேசின சீதனக்காசில அறுபதினாயிரம் தருமதியெண்டு அடிக்கடி என்னோட சண்டை போடுவீங்களல்லவா.... 
அந்தக் காசு நேற்றுத்தான் அம்மாவியள் தந்தவை.... உங்கட்டை கொடுக்கச் சொல்லி’’
"எவ்வளவு டொல...? தாசன் கேட்டான்.
"ஆயிரம்’’ என்றாள் கனிமொழி.
"ஆயிரமெண்டால் என்ன கணக்கில்...’’
"இலங்கைக் காசில். நமக்கு அறுபதினாயிரம் ரூபா தரவேண்டும். நமக்கெண்டு சொல்லுறதிலும் பார்க்க உங்களுக்கு எண்டு சொல்லுறதுதான் சரி.... அந்தக் காசை கனடிய டொலருக்குத் தந்திருக்கிறாங்க...’’
கொஞ்சம் கேலியும் கிண்டலும் கலந்து கோபத்தோடு சொன்னாள்.
"மூத்த பிள்ளைக்குப் பத்து வயதாகிட்டு, கல்யாணம் பண்ணி பதினொரு வருடத்து ஆறுமாசமுமாய்ச்சு.... அப்ப அறுபதினாயிரத்தின்ர பெறுமதி என்ன....? இப்ப என்ன பெறுமதி...?’’அவனுடைய வார்த்தையில் சூடேறியது.
"நீங்க சொல்ற கணக்கு சரியாய்க்கூட இருக்கலாம்.... ஆனா! நான் என்னுடைய அம்மாக்கள் பக்கம் நின்று கதைக்கல. ஒரு நியாயத்தைக் கேக்கிறன்.... என்னை கனடா எடுக்கும்போது இருபதினாயிரம் கனடியன் டொல ஏஜென்சிக்கு என்னுடைய அண்ணன் கொடுத்தவர். அதை எந்தக் கணக்கில வைச்சிருக்கிறீங்க....?’’அவன் உடம்பு அதிர்ந்தது. அவள் இப்படிக் கேட்பாள் என்று அவன் கனவில்கூட நினைக்கவில்லை.
"அதுவா....! அது சகோதர பாசத்தில… தங்கச்சியிண்டு எடுத்து விட்டவா. அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்....?’’
"இருக்கு.... அதுதான் கேட்டனான்’’
"அதுதானே சொல்லிற்றேனே சகோதர பாசமெண்டு. பிறகென்ன அதுக்குமேல கதை....’’
கனிமொழியின் முகத்தில் சோக ரேகைகள் லேசாகப் படர்ந்தது. தன்னுடைய பார்வையை தாசனில் நிலை நிறுத்திக் கொண்டாள். ஊமை நிலவாய்க் கிடந்த மனசு உக்கிரம் கொண்டது. எதையோ மனதில் தேக்கி வைத்து வலி எடுக்க வெளியில் கக்க வேண்டும் போல மனசு எத்தனிக்க அவள் கேட்டாள்.....
"நீங்க என்னத்துக்காக என்னைக் கல்யாணம் பண்ணினனீங்க?’’
தாசன் செருக்கோடு தலையை அசைத்து மேலும் கீழுமாக கனிமொழியைப் பார்த்துக்கொண்டு. 
"தூரத்துத் தண்ணி ஆபத்துக்கு உதவாது எண்டுதான்… எங்கடை சொந்த பந்தங்கள் விட்டுப் போகக்கூடாது உறவுக்குள்ளேயே செய்ய வேண்டும் எண்டுதான் உன்னைக் கல்யாணம் செய்தனான்...’’
"சொந்தம் விட்டுப் போகக் கூடாது எண்டதற்காகவா....? அல்லது சொத்துக்கு ஆசைப்பட்டா...? சந்திரனை நான் காதலிக்கிறேன் என்று தெரிஞ்சும் என்னைச் செய்வதால் கனடா போக வாய்ப்பு இருக்கிறதாலும் கொழுத்த சீதனம் கிடைக்குமெண்டல்ல என்னைச் செய்தனீ....’’ 
கோபம் கலந்த குரலில் தாசன் உன்ர வீட்டார்தான் என்னைக் கலைச்சவிய. என்ர படிப்புக்கும் உத்தியோகத்திற்கும் நீ மயங்கிப்போட்டு இப்ப என்னவோ கதைவிடுகிறாய்’’
"நானா உன்னட்ட மயங்கினனான்.... எனக்கு உன்ர குணம் தெரிஞ்சும் என்னால எங்கட வீட்டார்; கவலைப்படக் கூடாதெண்டல்லோ இந்த முடிவுக்கு வந்தனான். எனக்கு உன்னைப்பற்றித் தெரியாதோ...?’’ 
"என்னைப்பத்தி உனக்குத் என்ன தெரியும்...?’’
"நீயா! நீ வேலைக்கும் போகாமல் வெல்வயாரில(சமூகக் கொடுப்பனவு) இருந்து கொண்டு வட்டிக்குக் கொடுத்த மாதாவாய்ச்சே...!’’
தாசனின் முகத்தில் அதிர்ச்சி படர்ந்தது.
கனிமொழியின் இதயம் கண்ணீரில் நனைந்தது.
"ஆமாண்டி இதுவும் சொல்லுவ இதுக்கு மேலயும் சொல்லுவ.... ஓசியில இருந்து சாப்பிறயல்ல...’’ 
அவள் மனசு பொறுக்காமல் அழுது புலம்பிக் கொண்டு கொற கொறவென பிள்ளைகளை இழுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியில் நடந்தாள். 
எரியும் மெழுகிலிருந்து ஒழுகும் மெழுகுத் தண்ணிபோல் கண்களிலிருந்து தாரைதாரையாய் உப்புநீர்; ஓயாது சுரந்து கொண்டிருந்தது. மேனி சோகம் சுமந்து கறுத்துக் கிடந்தது. மூத்தவனும் அழுது கொண்டு வந்தான்.
"இப்ப குத்து வாங்கப்போறாய்.... அழாமல் வாடா.....’’ 
"அம்மா..... அம்மா....’’ என்று கவிதா கனிமொழியின் கையில் சுறண்டினாள்.
"என்னடி கவிதா....’’ என்று எரிஞ்சு விழுந்தாள்.
"அம்மா...! அப்பாவோட சண்டை பிடிக்கேக்கை சீதனம் சீதனம் எண்டு கதைச்சீங்க... சீதனமெண்டால் என்னம்மா?’’
"நாம் மக்டொனால்சில சாப்பாடு வாங்கேக்க சாப்பாட்டுக்குக் காசு கொடுத்து வாங்கிறோமெல்ல..அதே போலத்தான் உங்கட அப்பா என்னைக் கல்யாணம் செய்யிறதுக்காகக் கொடுக்கிற பணம்’’
"அப்ப அம்மா! நான் பெரியாளா வந்த பிறகு கல்யாணம் செய்யேக்க சீதனம் கேட்பாங்களா...?’’
"யாராவது கேட்டு வந்தால் களுத்து வெட்டுத்தானடி’’ என்று சிரிச்சுக் கொண்டு கனிமொழி சொன்னாள். கவிதா மீண்டும் எதையோ கேட்க முற்பட "பேசாமல் பறையாமல் வாடி" என்று மீண்டும் எரிஞ்சு விழுந்தாள். அந்தக் கணமே காற்றில் மிதந்து கொண்டு ஒரு பாடல் கனிமொழியின் காதில் விழுந்தது.
"சந்திரனைக் காணாமல் அல்லி முகம் மலருமோ....’’ அந்தப் பாடலை உள்ளத்தில் நிறுத்தி வைத்து இரசித்தாள். மனமெல்லாம் நிர்மலமாய்க் கிடந்தது. என்னமோ போல அவளுக்கு திடீரெனத் தோன்ற....அசடு வழிய சிரிச்சாள். மறுபடியும் கவிதா ஏதோ கேட்க முற்பட திடீரென நடையின் வேகத்தை சடுதியாக நிறுத்திக் கொண்டு...
"நீ கோயிலுக்கு வர்றியா....?வரலையா....?" என்று கேட்க கவிதாவின் பிஞ்சு மனம் பேசாமல் மௌனித்தது. 
மீண்டும் பிள்ளைகளகை; கையில் பிடித்துக் கொண்டு நடந்து கொண்டு போகும் போது அவள் சொன்னாள்." 
பூசை முடிய மக்டொனால்ஸ்சுக்குப் போய் சாப்பிடுவோமா....?’’
"ஓமம்மா’’ என்று சொல்லிக் கொண்டு கவிதாவும், மாறனும் மேலத்தேச நாகரிக முறையில் தோள்களை அசைத்தார்கள். சிரிச்சுக் கொண்டே மாறன் கேட்டான் "அம்மா.... அப்பாவுக்குச் சாப்பாடு....’’ "கொப்பனை மட்டும் மறக்கமாட்டீங்க. வீட்டுக்குப் போகும்போது அப்பாவுக்குப் பிடிச்சமான மக்சிக்கின் வாங்கிக் கொண்டு போவம்’’ என்றாள் கனிமொழி. 
மூன்றுபேரும் சிரித்துக்கொண்டே கோயிலை நோக்கிப் போனார்கள்.
(நன்றி-வீரகேசரி வார இதழ் –இலங்கை)


søndag 12. oktober 2014

இணையப்பார்வையில் இருந்த.........!

இணையப்பார்வையில் இருந்த.........!
கனடாவில் இருந்து திருஆசீர்தாசன் அவர்களால் எழுதப்பட்ட 

சென் மேரிஸ் சர்வதேச அபிவிருத்தி சங்கத்தின் தலைவருக்கு

 ஒரு பகிரங்க கடிதம் என்ற ஆக்கத்தை இணையத்தளத்தில் 

இருந்துஅகற்றும்படி நோர்வே கிளை வேண்டுகோள் விடுத்தி

ருந்தது.இணையத்தில் தனிநபர்களின் பெயர்களை குற்றம் 

சாட்டி எழுதப்படும் ஆக்கங்களை தவிர்த்து ஊரின் ஒற்றுமை

யை வளர்த்தெடுக்க உதவுமாறு கேட்டுக்  கொள்கின்றோம் 

என்று அக்கோரிக் கையில் எழுதப்பட்டிருக்கின்றதுநல்ல 

நோக்கத்தோடு விடுக்கப்பட்ட இந்த கோரிக்கையை  இணை

யம் கவனத்தில் எடுத்துக்கொள்ளும்,

                       அதற்கு முன் இணையம் அறிவுறுத்த விரும்புவது 

எதுவென்றால்,தவறுகள் களையப்பட்டு,அது மீண்டும் தோன்

 றாமல்,நிர்வாக நடவடிக்கைகள் கைக்கொள்ளப்பட்டால்,

ஒற்றுமையும்,அபிவிருத்தியும் தடை யில்லாமல் தன்பாட்டில் 

வளரும்தவறுகளை மறைப்பதினாலோ அல்லது அதற்காக

 பக்க சார்பாக நடவடிக்கை கள் எடுப்பதினாலோ பிரச்சினை  

கள் தீரப்போவதில்லை.அது பிளவுகளுக்கே  வழிவகுக்கும்

உதாரணத்திற்கு,சர்வதேச தலைவருக்கு என்று எழுதப்பட்ட 

ஆக்கத்தில் தவறுகள் இருந்தால் அது குறித்து,சர்வதேச 

சங்கம் தன் எதிர்ப்பினை காண்பித்திருக்க வேண்டும்,அல்லது

அதற்கான விளக்கத்தை ஆக்கத்தை எழுதியவருக்கு பதிலாக  

அளித்திருக்கவேண்டும்,இதனை விடுத்து நோர்வே கிளையா  

னது,சர்வதேச சங்கதிற்கு,சார்பாக கோரிக்கை விடும் போது 

அது ஏனைய கிளைகளுக்கு தவறான புரிதலை ஏற்ப டுத்த 

வாய்ப் புகள் உண்டு.நிர்வாகத் தில் இருப்பவர்கள் தத்தமக்

குரிய அதிகாரங்கள்,  பொறுப்புகளை செய்வ தோடு,மற்றவர்

களின் செயல்பாடுகளில் தலையிடாமல்,மாறாக ஊக்கப்படுத்

தினால் பிரச்சினைகள் தோன்ற  வாய்ப்புகள் இல்லை.நிர்வாக 

நடவ டிக்கைகள்,சரியான‌ முறையில் மேற்  கொள்ளப்பட்டால்

பல சிக்கல்களுக்கு தீர்வுகாணலாம்.நோர்வே கிளையின் 

உள் நோக்கம் நல்லதாக இருக்கலாம் ஆனால் தவாறான புரி

தலுக்கு என்ன செய்வதுஇன்னுமொரு விடையத்தை  இணை

யத்தளம் சுட்டிகாட்ட விரும்புகி ன்றது,தொடர்புசாதானத்தில் 

அபாரா வளர்ச்சி கண்ட,இந்த நூற்றாண்டிலே இணையத்தள

த்தை விட,வளையபூங்கா (Blogs)முக நூல்(facebook)

குறுஞ்செய்தி(Sms )நொடிப் படம் (Insthograme) இப்படி

செய்திகளை அறிவிக்க‌ பல வழிகள உண்டு.  அதனை யாரும்

 தடுக்கமுடியாது எனவே தவறுகள் எழுகின்ற போது,  

அல்லது கேள்விகள் எழும்பும் போது அதனை சரியான 

வழியில் எதிர் கொண்டு கையாளவதே பொது வாழ்வில்

பொதுப்பணிகளில் தம்மை ஈடுபடுத்திக் கொள்பவர்கள் 

செய்ய வேண்டிய முக்கிய பணியாகும்.  

                                          நன்றி