torsdag 3. mai 2018

டானியல் பெலிக்கான் --------நினைவில் பெருகும் தொடரியக்கம்

- கருணாகரன்
நாவாந்துறை என்றால் பலருக்கு அருமையான நண்டு அல்லது இறால் வாங்கலாம் என்ற எண்ணம் வரும். சிலருக்கு நெரிசலான குடியிருப்புக் காட்சி நினைவில் எழலாம். சிலருக்கு கடல் வாசனை மூக்கிலே மலரும். சிலருக்கு ‘யாழ்ப்பாண மாநகர எல்லைக்குள்ளிருக்கும் கடலோரப் பேரூரை ஏன் இன்னும் இப்படிச் சேறும் நீருமாக வைத்திருக்கிறார்கள்?’ என்ற கேள்வி எழக் கூடும். நாவாந்துறைக்குப் போனால் அங்கே உள்ள முஸ்லிம்களின் கடைகளில் “அந்த மாதிரிக் கொத்து ரொட்டி” சாப்பிடலாம் என்று சொல்லுவார்கள் சிலர். யாழ்ப்பாணத்தில் உதை பந்தாட்டத்துக்குப் பேர் பற்ற நாவாந்துறை சென் மேரீஸ் விளையாட்டுக்கழகத்தைச் சிலர் நினைவு கூருவார்கள். கழங்கட்டியில் பிடிக்கப்படும் ஒட்டி, ஓரா மீனுக்காக நாவாந்துறைக்கு போகிற ஆட்களும் இருக்கிறார்கள்.
எனக்கு நாவாந்துறை என்றால் இரண்டு விசயங்கள் நினைவில் வரும். ஒன்று, டானியல் அன்ரனியின் குடும்பம். இன்னொன்று அங்கிருந்து “நம்மவர்கள்” படகேறி இந்தியப் பயிற்சிக்குப் போய் வருவது. நாவாந்துறையிலிருந்தே ஈரோஸின் வண்டிகள் (படகுகள்) அந்த நாட்களில் (1980 களின் முற்பகுதியில்) தமிழகத்துக்குப் போய் வருவதுண்டு. மைக்கல், வீரகுமார், சின்ராசா, மோகன், கறோ, சீனன், ஜோன், ஜீவா, அன்ரனி என்று பல தோழர்கள் அங்கே போராளிகளாக இருந்தார்கள். இதில் வீரகுமார், மோகன், சின்ராசா ஓட்டிமாராக வேறு இருந்தனர்.
டானியல் அன்ரனி நாவாந்துறையிலிருந்தார். அங்கிருந்தே அவருடைய “சமர்” என்ற சிற்றிலக்கிய இதழை நடத்தினார். சமரை எவ்வளவு ஆர்வமாக நடத்தினாரோ அதற்குச் சற்றும் குறையாத ஈடுபாடு அவருக்கு உதைபந்தாட்டத்திலும் இருந்தது. சென் மேரீஸ் விளையாட்டுக்கழகத்தில் அன்ரனி பொறுப்பான பதவியிலிருந்து கழகத்தை வழிப்படுத்தினார். கழகத்தின் வெற்றி வரலாற்றை அறிந்தவர்களுக்கு இது தெரியும். ஏறக்குறைய இரண்டும் ஒரு வகையில் சமரோடு சம்மந்தப்பட்டதே. ஒன்று இலக்கியச் சமர். மற்றது விளையாட்டுக்கான சமர். அன்ரனியின் வாழ்க்கையும் அடையாளமும் இந்தச் “சமர்”தான். இறுதிவரை அன்ரனி சமரசங்களைத் தவிர்த்து வந்தார். பெரும்பாலும் நியாயத்துக்கான சமர்க் குணத்தோடும் ஓயாத செயற்பாட்டோடுமே வாழ்ந்தார் அன்ரனி.
அன்ரனியும் நானும் இலக்கிய வழியே நண்பர்களாகினோம். மட்டுமல்ல, அன்ரனியின் தம்பிமார் டானியல் ஜீவாவும் டானியல் சவுந்திரமும் நண்பர்களாகினர். இருவரும் எழுத்திலும் வாசிப்பிலும் ஈடுபாடுள்ளவர்கள். ஜீவா நம்மோடு இயக்கத்திலுமிருந்தார். ஆனால், ஜவாவை விட அன்ரனியும் சவுந்திரமுமே எனக்கு நெருக்கம். பின்னாளில்தான் ஜீவா நெருக்கமானார்.
இலக்கியம், இயக்கம் என்ற விசயங்கள் இவர்களோடு நெருக்கமாக்கியதைப்போல, இவர்களுடைய தந்தையார் டானியல் பெலிக்கானின் கூத்து ஈடுபாடும் இன்னொரு விதத்தில் பிடிப்பை உண்டாக்கியது.
பெலிக்கான் பெரிய கூத்துக் கலைஞர். அந்த வட்டாரத்தில் கூத்தினாலும் வாழ்க்கை ஒழுங்கினாலும் புகழடைந்தவர். நான் அறிந்தவரையில் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக கூத்தோடு கலந்து வாழ்ந்திருக்கிறார். நாவாந்துறையிலிருந்து மெலிஞ்சிமுனைவரை அவருடைய கூத்தைப் பார்த்துக் களித்தவர்கள் ஆயிரக்கணக்கானோர். பல தலைமுறையைச் சேர்ந்தவர்கள் பெலிக்கானுக்கு ரசிகர்கள்.
பெலிக்கானுடைய பிள்ளைகளின் இலக்கிய ஆர்வம், பொதுப்பணி ஈடுபாடு, விளையாட்டுச் சாதனைகள் போன்ற நற்காரியங்கள் எல்லாமே பெலிக்கானின் கலை ஈடுபாட்டின் தொடர்ச்சி அல்லது பிரதிபலிப்பே. அதோடு எப்போதும் பிறரைத் தம்முடைய குடும்பத்தினராகக் கருதி நேசித்து, உறவாடும் அவருடைய மேலான பண்பும் என எண்ணுகிறேன். இப்படி உருவாகிய அவருடைய ஆளுமை வெளிப்பாட்டையே பிள்ளைகள் பின்னாளில் பிரதிபலித்தார்கள்.
பெலிக்கானைப் போல கூத்தில் சோபிக்காது விட்டாலும் இலக்கியத்தில் டானியல் அன்ரனி தீவிரமாகச் செயற்பட்டார். “வலை” என்ற சிறுகதைத் தொகுப்பும் “சமர்” சிற்றிலக்கிய இதழும் டானியல் அன்ரனியின் சிறப்பு அடையாளங்கள்.
இப்பொழுது டானியல் அன்ரனியின் மகன் – பெலிக்கானின் பேரன் - கதைகள் எழுதுகிறார். புலம்பெயர் இலக்கியத்தில் தீவிரமாகச் செயற்படத் தொடங்கியுள்ளார். பிரான்ஸில் மொழி, கலை, இலக்கியம் என்ற ஈடுபாட்டுடன் அவருடைய வாழ்க்கை நகர்கிறது. அதாவது பெலிக்கானின் உள்ளோட்டம் தலைமுறைகளின் வழியே தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.
இப்படித்தான் டானியல் ஜீவாவும். இலக்கியத்திலேயே ஜீவாவுக்கு அதிக ஆர்வம். ஆனால், கூத்திலும் பிடிப்புண்டு. கனடாவில் ஜீவா ஆடும் களங்களில் பெலிக்கானே உயிர்கொண்டெழுவார் என்று நம்புகிறேன்.
சவுந்திரம், பெலிக்கானின் இன்னொரு வெளிப்பாடு. மென்போக்குடன் எல்லாத் தரப்போடும் ஊடாடிச் செல்லும் பயணியாக இருப்பது சவுந்திரத்தின் இயல்பும் அழகும். ஊரில் பெலிக்கானுக்கு வலது கரமாக நீண்டகாலம் இருந்ததும் சவுந்திரமே.
இப்படியெல்லாம் இருந்தாலும் அன்றைய நாட்களில் நாங்கள் எல்லோரும் ஒன்றாகக் கூடியிருந்து பேசிப் பறைந்து கொண்டாட வாய்த்ததில்லை. அவ்வப்போது சந்தித்துச் செல்வதோடு சரி. அநேகமாக எல்லாமே அவசரச் சந்திப்புகள். அவசரப் பயணங்கள். குறுகிய நேர உரையாடல்கள். பணியும் நோக்கமும் வேறாக – அதில் குறியாக – முனைப்பாக இருந்ததால் கலை பற்றிக் கதைப்பது குறைவு. விருப்பமிருந்தாலும் அதற்கான அவகாசமில்லை.
ஆனாலும் டானியல் அன்ரனியும் நானும் அங்கங்கே மணிக்கணக்கில், பேசிக்கொள்வோம். அன்ரனியின் தீவிரம் இதற்குக் காரணமாக இருக்கலாம். 1990 க்குப் பிறகு தினமும் நானும் சவுந்திரமும் சந்திப்போம். 1995 ஒக்ரோபர் இடப்பெயர்வோடு அதுவும் நின்று போனது. பிறகு 2002 இல் மீளச் சவுந்திரததைச் சந்தித்தேன். கண்டதும் கொண்டாடினார். அதுக்குப் பிறகொரு அஞ்ஞானவாச காலம். 2009 க்குப் பிறகு மீண்டும் சந்தித்தேன். இப்பொழுது யாழ்ப்பாணத்துக்குப் போகும்போதெல்லாம் சவுந்திரத்தை அவருடைய கடைக்குச் சென்று பார்த்துப் பேசுவதுண்டு.
மற்றும்படி எங்களுடைய அன்றைய வாழ்க்கை ஒரு இடத்தில் அமைதி கொள்ளவோ, தரித்து நிற்கவோ முடியாத தத்தளிப்போடும் அலைச்சல்களோடுமிருந்தது. ஒரு கூத்தை ஆற, அமர இருந்து பார்ப்பதற்கான வாழ்க்கை இல்லாமல் போய் விட்டது. அடிக்கடி நாவாந்துறைக்குப் போனாலும் அங்கே யாரோடும் தங்கி நிற்க வாய்த்ததில்லை. மனசுக்குள்ளே கொள்ளையாக அதற்கு விருப்பமுண்டு. நல்ல தோழர்கள் அங்கே இருக்கிறார்கள். ஆனால், பொழுதுதான் வாய்க்குதில்லை.
என்றாலும் பெலிக்கான் வீட்டுக்கு போனால் போதும். ஆளை விடவே மாட்டார். “என்னப்பா அவசரம். சாப்பிட்டு விட்டுப்போங்க. இந்த வயித்துக்குத்தானே எல்லாப் பாடும்.. கொஞ்ச நேரம் இருந்து ஆறி விட்டுப் போங்கள்” என்று அன்போடு கேட்பார். அதற்குள் வற்புறுத்தலும் ஆதரவும் நிறைந்திருக்கும்.
பெலிக்கானிடமிருந்த இந்தக் குணமே பிள்ளைகளிடம் வற்றாத ஈரமாக, பெருகும் ஊற்றாக இருந்து வருகிறது. அன்பைப் பகிர்வதும் உறவாடுவதும் நெகிழ்ந்து கரைவதுமான இயல்பு. வற்றாத கடல் அது.
பெலிக்கானை அவருடைய பிள்ளைகளின் வழியாகவே எப்போதும் பார்க்கிறேன். அப்படிப் பார்ப்பதே என் பொறுத்துச் சரியானது. அவர்களும் (பிள்ளைகளும்) தந்தையாரின் மீது அளவற்ற பாசமும் மதிப்பும் வைத்திருந்தனர். எப்போதும் தங்கள் தந்தையாரைக் குறித்து அவர்களுக்கு பெருமையும் நிறைவுமே உண்டு. அவரைப் பற்றிய பேச்சுகள் வரும்போது சவுந்திரத்தின் முகம் மலர்ந்து ஒளிரும். ஜீவாவின் குரலில் பெருமிதம் தொனிக்கும். பெண்களிடத்திலும் அப்படித்தான்.
பெலிக்கான் நான்கு தலைமுறையினருடன் கூத்தில் வாழ்ந்திருக்கிறார். அவராடிய கூத்துகள் “வீரத்தளபதி செபஸ்தியான்”, “அலசு”, “சங்கிலியன்”, “பண்டாரவன்னியன்”, “கிளியோபட்ரா”, “ஜெனோவா” என ஐம்பதுக்கு மேற்பட்ட கூத்துகளில் ஆடியிருக்கிறார். முதன்முதலில் ஒன்பது வயதில் “ஏழு பிள்ளை நல்லதங்காள்” என்ற கூத்தில் மேடையேறினார் பெலிக்கான். பிறகு “கிளியோபட்ரா”, “வீரத்தளபதி செபஸ்தியான்”, “அலசு”, போன்ற பல கூத்துகளுக்கு அண்ணாவியராக இருந்து பழக்கி மேடையேற்றியிருக்கிறார்.
அன்று கூத்துகளுக்கிருந்த முக்கியத்துவத்தை உணர்வோருக்கே அண்ணாவிகளின் கனதியும் கூத்துக் கலைஞர்களின் மதிப்பும் புரியும். அன்றைய சமூக நிலையில் (1980 களுக்கு முன்னான காலத்தில்) ஊர்களில் அண்ணாவிகளுக்கும் பரியாரியார்களுக்கும் (நாட்டு வைத்தியர்கள்) பெருமதிப்பிருந்தது. ஒவ்வொரு ஊரிலும் அண்ணாவிமாரும் பரியாரிமாரும் இருப்பார்கள். பரியாரிமார் உடலின் உயிரின் காவலர்கள் என்றால், அவற்றின் பராமரிப்பாளர்கள் என்றால், அண்ணாவிமார் கலையின் காவலர்கள், அவற்றின் பராமரிப்பாளர்களாக இருந்தார்கள்.
ஊர்களில் கூத்துக் கலை செழித்திருந்தது. வாழ்வோடு ஒன்றாகக்கலந்திருந்தது. எந்தக் குடும்பத்திலும் யாராவது ஒருத்தராவது கூத்துக் கலையோடு சம்மந்தப்பட்டே இருப்பார்கள். அந்தளவுக்கு ஊரெல்லாம் கூத்துக் கலைஞர்கள் பெருகிக் கிடந்தனர். அவ்வளவு கூத்துக் கலைஞர்களுக்கும் மதிப்புமிருந்தது. எல்லோரும் “பெரிய ஆட்களாக“ கருதப்பட்டனர். அவரவர் ஆடுகின்ற பாத்திரத்தின் பெயரிலேயே அவர்கள் அடையாளம் காணப்பட்டனர், அறியப்பட்டனர். தொழிலும் கலையுமாக அமைந்த வாழ்க்கை அது. அதில் ஆடிக் களித்த கலையாளுமைகளில் பெலிக்கானும் ஒருவர். அவராடிய பாத்திரங்கள் பல.
இன்று பெலிக்கான் இல்லை. ஆனால், அவருடைய நினைவுகள் யாழ்ப்பாணத்துக் கூத்துக் கலை வரலாற்றிலும் எப்போதுமிருக்கும்.
டானியல் பெலிக்கான், டானியல் அன்ரனி, டானியல் சவுந்திரம், டானியல் ஜீவா, டானியல் ஜெயந்தன் என்று ஒரு தொடரிழை தலைமுறைகளைக் கடந்து, நிலப்பரப்புகளைக் கடந்து, காலவெளியினூடே ஓடிக் கொண்டிருக்கிறது. இது சிறப்பே. பெலிக்கானின் ஈடுபாட்டுணர்வு பெருகிப் பரந்துள்ளது.
00
LikeShow More Reactions
Comment

tirsdag 1. mai 2018

ஆவலுடன் எதிர்பார்த்த 2018 ஆண்டுக்கான சென்.மேரிஸ் சனசமுக நிலைய புதிய நிர்வாக தெரிவு.

ஆவலுடன் எதிர்பார்த்த 2018 ஆண்டுக்கான சென்.மேரிஸ் சனசமுக நிலைய புதிய நிர்வாக தெரிவு.

பிரசுரிக்கபட்ட திகதி: 29/04/2018 (ஞாயிற்றுக்கிழமை)
இன்று நடைபெற்றது 2018 ஆண்டுக்கான சென்.மேரிஸ் சனசமுக நிலைய புதிய நிர்வாக தெரிவு நடை பெற்றது இவ் நிகழ்வில் பெரும் திரளான உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்களுடைய ஆதரவை வழங்கி எதிர்கால தமது தலைமைகளை தெரிவு செய்துள்ளனர்.
புதிய நிர்வாக விபரம்
தலைவர்- சிமியோன் நொலஸ்கோ
செயலாளர்- செ.அலன் பேக்கர்
பொருளாளர்- ம.நிரோஜன்
உப தலைவர் - அனற்
உப செயலாளர் - அ. சிலுவை
விளையாட்டுத் தலைவர் - பவுலிஸ்
கல்வி பொறுப்பாளர் - ச.டெனிக்சன்
கலை- அன்ரனிதாஸ் (சின்னவன்)
சுகாதாரம்- அன்ரோ
ஆன்மீகம் - எ. ஜெனாத்
நிலைய பொறுப்பாளர்- சுமன்
நிர்வாக உறுப்பினர்கள்- வின்சன் ,மகேந்திரன்,றெக்மன், ராசா. கொலு, மணி
சிறப்பான முறையில் செயற்பட்டு எமது கிராமத்தின் முன்னேற்றத்துக்காக ஒற்றுமையையுடன் செயற்பட அனைத்து மக்கள் சார்பாக வாழ்த்தி நிற்கின்றது நாவாய்மண் .

நாச்சிக்குடா அன்னை வேளாங்கண்ணி இரவுப் பாடசாலைக்கான கட்ட அத்திவாரக்கல் இடும் நிகழ்வு இன்று நடைபெற்ற போது...

நாச்சிக்குடா அன்னை வேளாங்கண்ணி இரவுப் பாடசாலைக்கான கட்ட அத்திவாரக்கல் இடும் நிகழ்வு இன்று நடைபெற்ற போது...
நாவாந்துறையினைச் சேர்ந்த திரு. இசிதோர் மொன்மொலின் ஜெராட் அவர்களினால் 2002ம் ஆண்டு இந்த இரவுப் பாடசாலை அமைப்பதற்கான முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டு ஆலய வளாகத்தில் இதற்கான கட்டம் அமைக்க தூண்கள் இடப்பட்ட போதும் உள்நாட்டுப்போரினால் அம் முயற்சிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டு மீண்டும் புதியதொரு இடத்தில் இப்பாடசாலைக்கான முயற்சிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ரூபா 3 மில்லியன் பெருமதியான திட்டமாக இத்திட்டம் அமைந்துள்ளது. மிகவும் பெறுமதியான திட்டத்தினை எமது கிராமத்திற்கு வழங்கும் இவருக்கு எம் நன்றிகளும் செபங்களும்..

இன்று நாவந்துறை புனித நீக்கிலாஸ் ஆலைய திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்

நாவாந்துறை புனித மரியன்னை தேவாலயத்தில் வளாகத்தில் சிலுவைப்பாடு சிற்பத்தொகுதி திறந்து வைப்பு

நாவாந்துறை புனித மரியன்னை தேவாலயத்தில் வளாகத்தில் சிலுவைப்பாடு சிற்பத்தொகுதி திறந்து வைப்பு

பிரசுரிக்கபட்ட திகதி: 30/04/2018 (திங்கட்கிழமை)
நாவாந்துறை புனித மரியன்னை தேவாலயத்தில் வளாகத்தில் வடிவமைக்கப்பட்ட சிலுவைப்பாடுகள் சிற்பதொகுதி இன்று(29.04.2018) காலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்தத் தேவாலய சூழலில் 14 சிற்பங்கள்  அமைக்கப்பட்டுள்ளன.
தற்போது ஒரு சில சிலைகளின் வேலைகள் முழுமையடைந்துள்ள நிலையில் இன்று திறந்து வைக்கப்பட்டது. ஏனையவையை விரைவில் மிகவும் அழகுற நேர்த்தியான முறையில் வர்ணம் பூசப்பட்டு வேலைகள் நிறைவடையவுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டது.