tirsdag 10. juni 2014

நாவாந்துறை மக்களுக்குப் பகிரங்க வேண்டுகோள்!

நாவாந்துறை மக்களுக்குப் பகிரங்க வேண்டுகோள்!


துறை முகங்களும், கடற்கரையோரப் பிரதேசங்களும் மீனவக் கிராமங்களுக்குப் பொதுவானையாக இருப்பது மிக அத்தியாவசியமானதும், தேவையானதும்கூட. தோணிகள், படகுகள் தரித்து நிற்கும் களக் கடலும், அதனைச் சார்ந்த கரையோரங்களும் தனியார் மயப் படுத்த முடியாததாகும். யாழ். தென்மேற்குக் கரையைப் பொறுத்தவரை கொட்டடியிலிருந்து குடாக்கரைவரை மீனவர்களின் இறங்குதுறையாகப் பாதுகாக்கப் பட வேண்டியதாகும்.ஏற்கனவே பாதுகாக்கப் படவேண்டிய கல்லுண்டாய்க் கரையோரம் குப்பைத் தொட்டியாக்கப் பட்டுவிட்டது.


எஞ்சியுள்ள நாவாந்துறைச் சந்தையான றாத்தலடியின் தெற்குப் பக்கத்திலிருந்து வடக்கே குடாக்கரை வரையுமுள்ள கடற்கரைப் பிரதேசங்களாவது பாதுகாக்கப் பட வேண்டியது இன்றியமையாத ஒன்றாகும்.

சில ஆண்டுகளுக்குமுன் கடலட்டை அவிக்கவும், இறால் கொள்வனவு செய்யவுமெனத் தற்காலிக வாடிகள் அமைத்தவர்கள் இன்று அவற்றைத் தமது சொந்தச் சொத்தாக கையகப் படுத்தும் மட்டும் எப்படிப் பொறுமை காத்தீர்கள் என்பது உண்மையில் எமக்குப் புரியவில்லைத்தான். மீதமுள்ள கரைகளும் இன்று தனியார் சொத்தாக மாற்றப் பட்டுக் கொண்டிருக்கின்றன. கடற்தொழிலாளர்கள் செறிந்து வாழும் கிராமங்களில் உள்ள கடற்கரையோர நிலங்களை தனியார் சொந்தமாக்கக் கூடாதென்றும், எத்தனை மீற்றர்களுக்கப்பால் தனியார் நிலங்களைத் தமதாக்க முடியும் என்ற விதிகளும் யாழ். கடற்தொழில் சமாசத்தில் விபரமாகவும், மிகத் தெளிவாகவும் வரையறுக்கப் பட்டுள்ளன என்பதை இனியாவது அறிந்து செயற்படுவதே அனைத்து மீனவ மக்களின் நலன்களுக்கும் உவப்புடையதாகும்.

இதற்கான அரச அதிகாரிகளைச் சந்தித்து உரிய நடவடிக்கைகளைக் காலக் கிரமத்தில் எடுக்கவில்லையெனில், ஏற்கனவே கடல் வளங்களின் மிகப் பெரும் பகுதியை இந்திய முதலாளிகளின் பல்லாயிரக் கணக்கான இழுவைப் படகுகளுக்குப் பலிகொடுத்து  இழந்த நிலையில் இருக்கிறோம். அதாவது நாம் கரையோரங்களையும் இழப்பது மட்டுமல்ல, ஏழாற்றுப் பிரிவின் வடக்காறு எழுவைதீவு வடக்கு முனையால் பயணித்து, ஊர்கவல்த்துறை கடற்கோட்டை வழியாக குருசடித்தீவு, பேராறு, நாவாந்துறையில் வந்துதான் மையங் கொள்கின்றது என்பது அனைத்துக் கடற் தொழிலாளர்களும் அறிவர். அதேவேளை அனலைதீவு, எழுவைதீவு போன்ற தீவுகளின் மேற்குக் கரைகளில் தமிழகத்துப் பாரம்பரிய இழுவைப் படகுகள் நாசம் செய்வதால் குருசடித்தீவு, நாவாந்துறை, பேராறு என வரவேண்டிய கடல்வளம் முற்றாக அற்றுப் போகும், போய்க் கொண்டிருக்கின்றது. இந்த அவலங்கள் இப்படியிருக்க, கடற்கரையோர நிலங்களையும் தனியார் தம் வசப் படுத்தும் கொடுமைகளையும் நாம் தாங்க வேண்டியுள்ளது.இனி இந்தக் கரையோரங்களில் வரப்போகும் தொழிற்சாலைக் கழிவுகளால் சூழல் மாசடைந்து, நாவாந்துறை என்ற அழகிய கரையோர நகர் மனிதர்கள் வாழ்வதற்குத் தகுதியற்ற பூமியாகும் என்ற எச்சரிக்கையையும் சொல்லி வைக்கின்றோம். 

-
தமயந்தி. 

Ingen kommentarer:

Legg inn en kommentar