torsdag 23. oktober 2014

இருப்பும் இழப்பும்

இருப்பும் இழப்பும்

செ.டானியல்ஜீவா

         
கனிமொழி ஏதோ அவசரம் அவசரமாக ஓடித் திரிந்தாள். கோபத்தில் மூத்த பையனுக்கு இரண்டு அடியும் போட்டாள். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அந்தோனியார்; கோயிலுக்கு, பத்துமணி பூசைக்காவது போய் விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டு சுறுசுறுப்பாக வீட்டு வேலை யைச் செய்து கொண்டி ருந்தாள். மளமளவென்று தேநீர் தயாரித்தாள். கனிமொழியின் கணவன் தாசன், முன் விறாந்தையில் இருந்து தொலைக் காட்சியில் ஐஸ்கொக்கி பார்த்துக் கொண்டிருந்தான். இரண்டாவது பிள்ளை கவிதா குளியல் அறையிலிருந்து அம்மா’’ என்று அழைத்தாள். என்ன என்று கனிமொழி கேட்பதற்குள் அழுது கொண்டு நின்ற மூத்தவன் மாறன் அம்மா! தங்கச்சி கக்காவிற்கு இருந்தவள். அதான் கழுவ வரட் டாம் எண்டு கத்துறாள்’’ என்றான். கொஞ்சம் பொறுக்கச் சொல்லு’’ என்றாள். மாறன் காதில் வாங்கிக் கொண்டு குளியலறையை நோக்கிப் போனான்.
                                  கனிமொழி வேலைக்குப் போகவில்லை என்பதைத் தவிர அனைத்து வேலைகளையும் அவளே சுமக்க வேண்டும். மூத்தபொடியன் ஒரு இடத்தில் இருக்க மாட்டான். எதையாவது தோண்டிக் கொண்டேயிரு ப்பான். அதுவும் பாடசாலை இல்லாதவேளை அவனுடைய துடியாட்டம் தாங்க முடியாது. அதனால் அவள் படும்பாடும் சொல்லவே முடியாது. சின்னவள் அவனைவிடத் துடியாட்டம். எப்போதும் தாய் கூடவே இருக்க வேண்டும் என்ற பழக்க முடையவள். கொஞ்ச நேரம் விட்டு விலக முடி யாது. கனிமொழியின் கையைப் பிடித்தபடியே திரிவாள். அவ்வப் போது வரும் தொலைபேசியில் நண்பிகளிடம் உரையாடுவதிலும், நாடகம், சினிமாப்படம் போன்றவற்றில் அவள் மனம் லயித்து இருந்த போதும் உள்ளம் எப்போதும் சோகத்தைச் சுமந்தபடியே இருக்கும்.  மூத்தவன் வயி ற்றில் இருக்கும் போதுதான் அவள் கனடா வந்தாள். அந்த வருகை கூட திடீரென எழுந்த எண்ணம்தான். அவள் கனடாவிற்கு வருவாள் என்று துளிக்கூட நினைக்கவில்லை. தாசனைத் திருமணம் செய்தது தவிர்க்க முடியாமல்தான். அதை இப்போது நினைத்தாலும் நெஞ்சு வெடித்துவிடும் போல் அவளுக்கு இருக்கும். 
                                                                      கனிமொழி சந்திரனைக் காதலித்தாள். சந்திரனா....? யாரு பள்ளிக்கூட வாசனை தெரியாதவனா....? அந்தக் கடல் காகமா....? போயும்போய் அந்தப் பொடியனையா, நம்ம வீட்டில் மாப்பிள் ளையாய் எடுக்கிறது. இதெல்லாம் நடக்கிற காரியமா? எங்கட அந்தஸ் துக்கு ஏற்ற மாப்பிள்ளையைத்தான் கட்டித் தருவோம். நான் ஒன்னப் பெத்த போதே உனக்கு உத்தியோக மாப்பிள்ளையைத்தான் செய்து கொடுக்க வேண்டுமென்று கனவு கண்டேனடி.... அந்தக் கனவை நனவா க்கத்தான் இப்ப நினைக்கிறன். நம்மட தலைமுறையே மீன்பிடிச்சு.... மீன் பிடிச்சு வாழ்ந்து வந்தவங்க.... உனக்கு உத்தியோக மாப்பிள்ளையைத் தேடிக் கொடுத்தாவது அந்த நிலையை மாத்த வேண்டும் எண்டு நினைப்ப தில் என்ன தப்படி...? அதுக்குள்ள.... குணக்கடியேதும் காட்டினாய் எண் டால் நடக்கிறதே வேற.....’’ இது அம்மாவின் அகங்காரத்தில் வந்த வார்த்தைகள். ”ம்....’’ எல்லாத் திட்டித் தீர்த்தலுக்கும் மௌனம் காத்தாள் கனிமொழி. இதயம் அழுது அழுது ஈரமாகியது.
”என்னடி! ஊமமாரியாச்சி மாதிரி ஒண்டும் பறையாமல் நிக்கிற...’’ ஏதும் எங்களுக்குத் தெரியாம செட்டப் பண்ணீட்டியோ...?’’ 
மௌனமாய் இருந்த கனிமொழி வாய் திறந்தாள். 
"னேய் அம்மா.... எனக்கு வீட்டைவிட்டு சந்திரனோடு ஓடுவதெண்டால் எப்போவோ ஓடியிருப்பன். நம்முடைய குடும்பக் கௌரவம் காற்றில் பறக்கும் எண்டு தான் இன்றுவரை பொறுத்திருக்கிறன். சந்திரனிலை என்ன குறைச்சலை நீங்க கண்டனீங்க....?’’
"அவன் எங்கட குடும்பத்துக்குப் பொருத்தமில்லாதவன்’’
"பொருத்தம் எப்படிப் பார்க்கிறீங்க வெறும் உத்தியோகத்தை வைத்தா...? சந்திரன் படிக்கல்ல, கடலுக்குப் போறவன் நான் ஒத்துக் கொள்றன். ஆனா அவன் எல்லாத்தையும் விட நல்ல மனிதன். அந்த உள்ளத்தைத்தான் என் மனம் விரும்புதும்மா. அது என்ன தவறு?’’ 
கனிமொழியின் தாய் கனிமொழியை நெத்திமுட்டாய்ப் பார்த்தாள். "உனக்குப் பேசியிருக்கிற மாப்பிள்ளை உயர்ந்த உத்தியோத்தில இருக்கிறவன். நம்மட சாதி திமில் சாதி.... மீன்பிடிக்கிற சாதி... என்ர மருமகன் உத்தியோகம் பார்க்கிறார்; எண்டால் யாருக்கு சாதி தெரியப் போகுது, எங்களுக்கு எவ்வளவு பெருமையாய் இருக்கும். நீ சொல்லுற சந்திரனைப் பார்த்தாலே சாதி தெரியுமடி’’ ஆழ் மனதிலிருந்து சாதியும், உத்தியோகமும் சேர்ந்து உக்கிரமாய் வார்த்தையில் தெறித்தது.
"சாதியென்ன சாதி... மனுசன்ர மனம் சரியாய் இருந்தால் போதும்... அவர் எனக்கு எல்லா வகையிலும் பொருத்தமானவர். எனக்கு ஒண்டெண்டால் அவர்; மனசு தாங்காது. அவருக்கு ஒண்டெண்டால் என்மனசு தாங்காது. அப்படியிருக்கும் போது என்னெண்டு இன்னொருவருக்கு தலையை நீட்டுறது....’’
“அடி செருப்பாலை... மூஞ்சி முகறக் கட்டையெல்லாம் உடைச்சுப் போடுவன். முகத்தால ஆணம்வர தருவனடி.... கொப்பற்ற குணம் தெரியாதோ. இவ்வளவும் கேள்விப்பட்டாலே தோலுரிச்சுப் போடுவார். உன்ன கொலை செய்யவும் பயப்படமாட்டாரடி....’’ அம்மாவின் திமிரில் தெறித்த வார்த்தைகள். மௌனமாய் எப்போதுமே இருந்து பழக்கப்பட்ட கனிமொழி தாயின் வார்த்தைக்கு தொடர்ந்து மறுவார்த்தை பேசாது.
தாயின் எச்சரிக்கையான வார்த்தைக்குப் பின்னும் எப்படித்தான் அவளால் மறுத்துப் பேச முடியும். அவள் தாயோடு எப்போதும் மறுத்துப் பேசுவது குறைவு. தாயின் மீது மிகவும் அன்பும் மரியாதையும் வைத்திருக்கிறாள். கீழேயிருந்த கனிமொழி எழுந்தாள். வேட்டுத் தீர்ப்பதற்கு முன்னால் வரும் ஒளிப்பீச்சி போல் முகம் பிரகாசமாய் இருந்தது. குனிந்த தலை நிமிர்ந்தது. நேரிடையாகத் தாயைப் பார்த்தாள். கண்களில் கூரிய பார்வை. மனதில் தெளிவான சிந்தனை....
"அம்மா!”
"என்னடி....’’
"நீங்க நெனச்ச மாப்பிள்ளையையே கல்யாணம் செய்யிறனணை...’’ 
தாய் மலைத்துப் போனாள். இந்த முடிவுக்காகத்தானே இத்தனை நாளாகத் காத்திருந்தேன் என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டாள். அதுதானே பார்த்தேன்... என்ர புள்ளையாச்சே...’’
அதன்பின் கனிமொழி, தாசனுக்கு வாழ்க்கைத்துணையானாள்.
தொலைபெசி கிணுகிணுத்தது. தோலை பேசிச் சத்தத்தில் பழைய நினைவுகள் தொலைந்து போய் சுயநினைவுக்கு வந்தாள்.
"கலோ...’’
மறு முனையிலிருந்தும் கலோ...’’
"புள்ள நேற்றுத் தந்த காசு கொடுத்தாச்சா மோனை?’’
"இல்லையெணை.... இனித்தான் கொடுக்கப்போறன். அவர்ட்ட காசைக் கொடுத்துவிட்டு என்ன சொல்லுறார்; எண்டு திருப்பி ரெலிபோன் எடுத்து சொல்லுறனணை. இப்ப புள்ள குளியலறையிலிருந்து கத்திறாள். சின்னவளுக்கு போத்தலில் பால் ஊத்தி தண்ணியிலை ஆறவிட வேண்டும். கோயிலுக்கு போறத்துக்கு பிள்ளையளைக் குளிக்கவாத்து உடுப்புகள் போடணுமன....’’
"உன்ர புருசன் என்னடி செய்யிறார்?’’
"அவரைப் பற்றி உனக்குத் தெரியாதோன! பார்த்துக் கொண்டிருக்கிறார்;... ஐஸ்கொக்கி பார்க்கிறதெண்டால் அவருக்கு பைத்தியமணை...’’
"என்ன பைத்தியமாக இருந்தாலும் வீட்டில இருக்கிற சின்னவேலைகூட செய்யிறது இல்லையா...?’’
.... மௌனம் காத்தாள் கனிமொழி
"என்னடி மோனை ரெலிபோனை வைச்சுக்கொண்டு கதையாமல் இருக்கிறாய்...?’’
ஒரு கணம்தான் தாயின் குரல் கேட்டு சுயநினைவுக்கு வந்தாள்.
"ஒண்டுமில்லையணை.... திரும்ப எடம்மா இப்ப கோயிலுக்கு போகணுமன...’’ என்று சொல்லிக் கொண்டு கனிமொழி தொலைபேசியைத் துண்டித்தாள்.
மீண்டும் சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்கினாள். பிள்ளைகளைக் குளிக்கவாத்து, உடுப்புகளைப் போட்டுவிட்டு, குசினிக்குள் வந்தாள். இரண்டு கப்பில் 
தேத்தண்ணியை ஊத்தினாள். ஒரு கப்பில் தாசனுக்கும், மறுகப்பில் தனக்கும் தேத்தண்ணியோடு குசினியைவிட்டு முன் விறாந்தைக்கு வந்தாள். இடது 
கையில் வைத்திருந்த கப்பிலிருந்த தேனீரை ஒரு தடவை உறிஞ்சிக் குடித்தாள். வலது கையில் வைத்திருந்த கப்பை தாசனுக்கு நீட்டினாள். தேனீரை 
வாங்குவதற்கு நிமிர்ந்த தலை ஒரு கணம் விசம் ஊறியது. ஒரு முறட்டுப் பார்வை, சினிமாவில் வரும் அசல் வில்லன் பார்ப்பது போல்... கோபத்தை 
உள் மனதில் தேக்கிக்கொண்டு,
"என்னவாம் உங்கடம்மா...?’’
"நம்மட கல்யாணத்தில பேசின சீதனக்காசில அறுபதினாயிரம் தருமதியெண்டு அடிக்கடி என்னோட சண்டை போடுவீங்களல்லவா.... 
அந்தக் காசு நேற்றுத்தான் அம்மாவியள் தந்தவை.... உங்கட்டை கொடுக்கச் சொல்லி’’
"எவ்வளவு டொல...? தாசன் கேட்டான்.
"ஆயிரம்’’ என்றாள் கனிமொழி.
"ஆயிரமெண்டால் என்ன கணக்கில்...’’
"இலங்கைக் காசில். நமக்கு அறுபதினாயிரம் ரூபா தரவேண்டும். நமக்கெண்டு சொல்லுறதிலும் பார்க்க உங்களுக்கு எண்டு சொல்லுறதுதான் சரி.... அந்தக் காசை கனடிய டொலருக்குத் தந்திருக்கிறாங்க...’’
கொஞ்சம் கேலியும் கிண்டலும் கலந்து கோபத்தோடு சொன்னாள்.
"மூத்த பிள்ளைக்குப் பத்து வயதாகிட்டு, கல்யாணம் பண்ணி பதினொரு வருடத்து ஆறுமாசமுமாய்ச்சு.... அப்ப அறுபதினாயிரத்தின்ர பெறுமதி என்ன....? இப்ப என்ன பெறுமதி...?’’அவனுடைய வார்த்தையில் சூடேறியது.
"நீங்க சொல்ற கணக்கு சரியாய்க்கூட இருக்கலாம்.... ஆனா! நான் என்னுடைய அம்மாக்கள் பக்கம் நின்று கதைக்கல. ஒரு நியாயத்தைக் கேக்கிறன்.... என்னை கனடா எடுக்கும்போது இருபதினாயிரம் கனடியன் டொல ஏஜென்சிக்கு என்னுடைய அண்ணன் கொடுத்தவர். அதை எந்தக் கணக்கில வைச்சிருக்கிறீங்க....?’’அவன் உடம்பு அதிர்ந்தது. அவள் இப்படிக் கேட்பாள் என்று அவன் கனவில்கூட நினைக்கவில்லை.
"அதுவா....! அது சகோதர பாசத்தில… தங்கச்சியிண்டு எடுத்து விட்டவா. அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்....?’’
"இருக்கு.... அதுதான் கேட்டனான்’’
"அதுதானே சொல்லிற்றேனே சகோதர பாசமெண்டு. பிறகென்ன அதுக்குமேல கதை....’’
கனிமொழியின் முகத்தில் சோக ரேகைகள் லேசாகப் படர்ந்தது. தன்னுடைய பார்வையை தாசனில் நிலை நிறுத்திக் கொண்டாள். ஊமை நிலவாய்க் கிடந்த மனசு உக்கிரம் கொண்டது. எதையோ மனதில் தேக்கி வைத்து வலி எடுக்க வெளியில் கக்க வேண்டும் போல மனசு எத்தனிக்க அவள் கேட்டாள்.....
"நீங்க என்னத்துக்காக என்னைக் கல்யாணம் பண்ணினனீங்க?’’
தாசன் செருக்கோடு தலையை அசைத்து மேலும் கீழுமாக கனிமொழியைப் பார்த்துக்கொண்டு. 
"தூரத்துத் தண்ணி ஆபத்துக்கு உதவாது எண்டுதான்… எங்கடை சொந்த பந்தங்கள் விட்டுப் போகக்கூடாது உறவுக்குள்ளேயே செய்ய வேண்டும் எண்டுதான் உன்னைக் கல்யாணம் செய்தனான்...’’
"சொந்தம் விட்டுப் போகக் கூடாது எண்டதற்காகவா....? அல்லது சொத்துக்கு ஆசைப்பட்டா...? சந்திரனை நான் காதலிக்கிறேன் என்று தெரிஞ்சும் என்னைச் செய்வதால் கனடா போக வாய்ப்பு இருக்கிறதாலும் கொழுத்த சீதனம் கிடைக்குமெண்டல்ல என்னைச் செய்தனீ....’’ 
கோபம் கலந்த குரலில் தாசன் உன்ர வீட்டார்தான் என்னைக் கலைச்சவிய. என்ர படிப்புக்கும் உத்தியோகத்திற்கும் நீ மயங்கிப்போட்டு இப்ப என்னவோ கதைவிடுகிறாய்’’
"நானா உன்னட்ட மயங்கினனான்.... எனக்கு உன்ர குணம் தெரிஞ்சும் என்னால எங்கட வீட்டார்; கவலைப்படக் கூடாதெண்டல்லோ இந்த முடிவுக்கு வந்தனான். எனக்கு உன்னைப்பற்றித் தெரியாதோ...?’’ 
"என்னைப்பத்தி உனக்குத் என்ன தெரியும்...?’’
"நீயா! நீ வேலைக்கும் போகாமல் வெல்வயாரில(சமூகக் கொடுப்பனவு) இருந்து கொண்டு வட்டிக்குக் கொடுத்த மாதாவாய்ச்சே...!’’
தாசனின் முகத்தில் அதிர்ச்சி படர்ந்தது.
கனிமொழியின் இதயம் கண்ணீரில் நனைந்தது.
"ஆமாண்டி இதுவும் சொல்லுவ இதுக்கு மேலயும் சொல்லுவ.... ஓசியில இருந்து சாப்பிறயல்ல...’’ 
அவள் மனசு பொறுக்காமல் அழுது புலம்பிக் கொண்டு கொற கொறவென பிள்ளைகளை இழுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியில் நடந்தாள். 
எரியும் மெழுகிலிருந்து ஒழுகும் மெழுகுத் தண்ணிபோல் கண்களிலிருந்து தாரைதாரையாய் உப்புநீர்; ஓயாது சுரந்து கொண்டிருந்தது. மேனி சோகம் சுமந்து கறுத்துக் கிடந்தது. மூத்தவனும் அழுது கொண்டு வந்தான்.
"இப்ப குத்து வாங்கப்போறாய்.... அழாமல் வாடா.....’’ 
"அம்மா..... அம்மா....’’ என்று கவிதா கனிமொழியின் கையில் சுறண்டினாள்.
"என்னடி கவிதா....’’ என்று எரிஞ்சு விழுந்தாள்.
"அம்மா...! அப்பாவோட சண்டை பிடிக்கேக்கை சீதனம் சீதனம் எண்டு கதைச்சீங்க... சீதனமெண்டால் என்னம்மா?’’
"நாம் மக்டொனால்சில சாப்பாடு வாங்கேக்க சாப்பாட்டுக்குக் காசு கொடுத்து வாங்கிறோமெல்ல..அதே போலத்தான் உங்கட அப்பா என்னைக் கல்யாணம் செய்யிறதுக்காகக் கொடுக்கிற பணம்’’
"அப்ப அம்மா! நான் பெரியாளா வந்த பிறகு கல்யாணம் செய்யேக்க சீதனம் கேட்பாங்களா...?’’
"யாராவது கேட்டு வந்தால் களுத்து வெட்டுத்தானடி’’ என்று சிரிச்சுக் கொண்டு கனிமொழி சொன்னாள். கவிதா மீண்டும் எதையோ கேட்க முற்பட "பேசாமல் பறையாமல் வாடி" என்று மீண்டும் எரிஞ்சு விழுந்தாள். அந்தக் கணமே காற்றில் மிதந்து கொண்டு ஒரு பாடல் கனிமொழியின் காதில் விழுந்தது.
"சந்திரனைக் காணாமல் அல்லி முகம் மலருமோ....’’ அந்தப் பாடலை உள்ளத்தில் நிறுத்தி வைத்து இரசித்தாள். மனமெல்லாம் நிர்மலமாய்க் கிடந்தது. என்னமோ போல அவளுக்கு திடீரெனத் தோன்ற....அசடு வழிய சிரிச்சாள். மறுபடியும் கவிதா ஏதோ கேட்க முற்பட திடீரென நடையின் வேகத்தை சடுதியாக நிறுத்திக் கொண்டு...
"நீ கோயிலுக்கு வர்றியா....?வரலையா....?" என்று கேட்க கவிதாவின் பிஞ்சு மனம் பேசாமல் மௌனித்தது. 
மீண்டும் பிள்ளைகளகை; கையில் பிடித்துக் கொண்டு நடந்து கொண்டு போகும் போது அவள் சொன்னாள்." 
பூசை முடிய மக்டொனால்ஸ்சுக்குப் போய் சாப்பிடுவோமா....?’’
"ஓமம்மா’’ என்று சொல்லிக் கொண்டு கவிதாவும், மாறனும் மேலத்தேச நாகரிக முறையில் தோள்களை அசைத்தார்கள். சிரிச்சுக் கொண்டே மாறன் கேட்டான் "அம்மா.... அப்பாவுக்குச் சாப்பாடு....’’ "கொப்பனை மட்டும் மறக்கமாட்டீங்க. வீட்டுக்குப் போகும்போது அப்பாவுக்குப் பிடிச்சமான மக்சிக்கின் வாங்கிக் கொண்டு போவம்’’ என்றாள் கனிமொழி. 
மூன்றுபேரும் சிரித்துக்கொண்டே கோயிலை நோக்கிப் போனார்கள்.
(நன்றி-வீரகேசரி வார இதழ் –இலங்கை)


Ingen kommentarer:

Legg inn en kommentar