lørdag 10. januar 2015

கவிதை (நன்றிக்கடன்) AJ டானியல் பரிஸ் பிரான்ஸ்‏


பள்ளியிடைவழியே
கோரமாய் வெயில்
இரக்கமின்றி சுட்டெரிக்க
குடையாய் பரந்து
எமை மூடிய
ஆலவிருட்சங்களே
குளிர்வூட்டிய
வேப்ப மரங்களே
உங்களுக்கு நன்றிகள்


தண்ணீர்த்தாகம்..
நாவரண்டு துவண்டவேளை
தண்ணீர்ப்பந்தராய்
தாகம் தீர்த்த காக்கா
தே நீர்க்கொட்டிலும்
மார்க்கண்டு சிற்றூண்டி
சாலையும் என்றுமே
அன்னமிட்ட கைகளே
நன்றி உங்களுக்கு


கோவில் விட்டு பள்ளி
முகப்பில் குடிவந்த
சாம்பற் புறாக்களே
நாங்கள் கல் எறிந்து
கிளையுடைந்தும் கோபம் கொள்ளாகொட்டங்காய்
மரங்களே
ஞாபகமிருக்கிறதா எமை
தெளிவாய் ஞாபகமிருக்கிறதா?

பள்ளி ஓய்வு நேரம்
வேப்பமர நிழலில்
கூட்டமாய் கூடி
வெட்டியாய் பேசி
எள்ளி நகையாடி மனம்
துள்ளி விளையாடி
துக்கம் மறந்து
வெட்கமின்றி போசனம்
பறித்துண்டோம்
மறந்திடுமோ
இனிதானும்


சாதியேது மதமேது
அர்த்தமறியா காலம்
சரஸ்வதி பூஜை ஒளிவிழா
எங்கள் இன்பமான நேரம்
கல்வியோடு ஒழுக்கம்
எம்மிரு கண்கள்
கலை எம் உடலோடு ஒன்றி
விளையாட்டு எம்
அன்புத் தோழனாய்
கற்பித்த நல்லவர்கள்
என்றும் எம் நடமாடும்
தெய்வங்களாய்

தோல்வியில் தட்டிக்கொடுத்து
வெற்றியில் எட்டி நின்று
கை தட்டியவர்களே
பல கோடி நன்றிகள்
எம் சுவாசமுள்ளவரை
இதயம் இயல்பாய் துடித்துக்கொண்டே இருக்கும்
நீங்கள் அதில்
வாழ்ந்து கொண்டே இருப்பீர்கள்

Ingen kommentarer:

Legg inn en kommentar